விக்சித் பாரத் தொடர்பான செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அனுப்புவதை நிறுத்துமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 21) உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதற்கு முன்னதாக, இந்தியா 2047ஆம் ஆண்டு 100வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக அதாவது விக்சித் பாரத் ஆக உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
விக்சித் பாரத்தை உருவாக்குவதை நோக்கிப் பயணிப்பதாகவும், இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு ‘விக்சித் பாரத்’ திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. அதன்படி, பலர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் விக்சித் பாரத் திட்டம் என்ற பெயரில் அதுதொடர்பான தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் விக்சித் பாரத் தொடர்பான தகவல்களை நிறுத்துமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.