17 வயது நிரம்பினாலே வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்!
17 வயது நிரம்பியவர்களும் இனி வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளைஞர்கள் ஜனவரி 1ஆம் தேதி 18 வயதை பூர்த்தி செய்ய வேண்டும் என இதுவரை நிபந்தனை இருந்தது. இனிமேல் அப்படி காத்திருக்க வேண்டாம். 17 வயது நிரம்பியவர்களும் இனி வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டுக்கு 4 முறை என ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணபிக்க விரும்புபவர்கள் www.nsvp.in என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும், புதியதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்போர் படிவம் 6-ஐயும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குவதற்கு படிவம் 7-ஐயும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்காக
படிவம் 6B- யையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சீனிவாசன்