குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இன்று (அக்டோபர் 14) மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று மாலை 3 மணியளவில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு இரண்டு மாநிலங்களிலும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட, மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக தனது வெற்றியை தக்கவைத்தது. பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக 27 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையான கட்சியாக குஜராத்தில் உருவெடுத்துள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையே போட்டி அதிகரித்துள்ளது.
இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த ஜெய்ராம் தாக்கூர் உள்ளார். சமீப நாட்களில் இமாச்சல் பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிக முறை சென்று வளர்ச்சி திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலில் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி உள்ளார்.
அவர் இன்று முதல் இமாச்சல் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதனால் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே போட்டி நிலவுகிறது.
செல்வம்
ரயில் முன் தள்ளி மாணவி கொலை : கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!