நா.மணி
வங்கி நெருக்கடிகள் பெரு மந்தத்திற்கு எவ்வாறு வித்திடுகின்றன?
தற்போது பெர்ன்னான்க்கிற்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுக்கான ஆய்வுக் கட்டுரை 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெரு மந்தத்தை ஆய்வு செய்தமைக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
1930 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து, 1933 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்க நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 46 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. வேலையின்மை விகிதம் 25 விழுக்காடு அதிகரித்தது. பொருளாதார நெருக்கடி, காட்டுத் தீ போல் பரவியது.
வேலையிழந்த தொழிலாளர்கள்
இதன் விளைவாக, ஆழமான பொருளாதார சரிவு உலகம் எங்கும் வியாபித்தது. இங்கிலாந்தில் வேலையின்மை 25 விழுக்காடு அதிகரித்தது. ஆஸ்திரேலியா நாட்டின் வேலையின்மை விகிதமும், 29 விழுக்காடு உயர்ந்தது. ஜெர்மனி நாட்டின் தொழில் துறை உற்பத்தி,பாதியாக குறைந்தது. அந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிலி நாட்டின் தேசிய வருவாய் 33 விழுக்காடு குறைந்தது. எங்கெங்கும் வங்கிகள் நிலை குலைந்தன.
மக்கள்,தங்கள் இல்லங்களை விட்டு, வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டனர். பணக்கார நாடுகளில் கூட, பட்டினி வியாபித்தது. 1935 க்கு பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் மீட்சி அடைய தொடங்கியது.
பணப் பற்றாக்குறைதான் காரணமா?
பெர்ன் னான்க் தனது ஆய்வு கட்டுரையை வெளியிடுவதற்கு முன்பு, மரபார்ந்த அறிவே பொருளாதார வல்லுனர்களிடமும் இருந்தது. அமெரிக்காவின் மைய ரிசர்வ் வங்கி, “கூடுதலாக பணத்தை அச்சடித்து, புழக்கத்திற்கு விட்டிருந்தால், அமெரிக்காவின் இந்த பெரும் மந்தத்தை தடுத்து இருக்க முடியும்” என்று நம்பினார்கள். பெர்ன் னான்க் கூட, பணத்தின் பற்றாக்குறையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதினார்.
ஆனால், நெருக்கடி ஏன் ஆழமாகவும், அதிக காலமும் நீடிக்கிறது என்பதை இந்த அனுமானங்களால் விளக்க முடியவில்லை. உலகப் பொருளாதார பெருமன்றத்திற்கான முக்கியமான காரணம், வங்கி முறைமை சேமிப்புகளை, உற்பத்தி சார்ந்த முதலீடுகளாக மாற்ற இயலாமையே காரணம் என்பதை நோபல் பரிசு பெற்ற பெர்ன் னான்க் கண்டறிந்தார்.
வரலாற்று ரீதியான தரவுகள், புள்ளியல் முறைகள், ஆகியவற்றை இணைத்து, ஆய்வு செய்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவதில், முக்கிய பங்காற்றும் காரணிகளை கண்டறிந்தார்.
மேலும் தோல்வியுற்ற வங்கிகளுடன் நேரடியாக தொடர்புடைய, காரணிகள் வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றியது, என்பதையும் அவர் கண்டறிந்தார்.
உலகப் பொருளாதார பெருமந்தம், 1929 ஆம் ஆண்டில் சாதாரண, இயல்பான பொருளாதார பின்னடைவோடு தொடங்கியது. ஆனால், 1930களில் அது ஒரு பெரும் வங்கி நெருக்கடியாக உருப்பெற்றது.
வங்கிகளுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்
வங்கிகளின் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் பாதியாக குறைந்தது. வங்கியில் பணத்தை சேமித்து வைத்தவர்கள், தங்கள் வங்கிச் சேமிப்பு, தப்பிப் பிழைக்குமா என கவலை அடைந்தனர். தங்களது சேமிப்புகளை திரும்ப பெற முண்டியடித்துக் கொண்டு சென்றனர். எல்லா மக்களும் ஏக காலத்தில், சேமிப்புகளை திரும்பத்தர வங்கியில் ரொக்கம் கையிருப்பு இல்லை.
எனவே, வங்கிகள் அதன் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்க நிர்பந்திக்கப்பட்டன. இதனால், வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இறுதியாக, வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மீதமுள்ள வங்கிகளும் தோல்வியை தழுவும். அதன் சேமிப்புகளும் குறையும் என்ற அச்சம் பரவியது. பல வங்கிகள், கடன் கொடுக்கவும் பயந்தன. டெபாசிட்டுகளை வைத்திருந்தவர்கள், உடனடியாக அதனை திரும்பித் தர கோரிய போது , சேமிப்புகளால் வாங்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக விற்க வேண்டிய நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன. இந்த பிரச்சனைகளின் காரணமாக, வணிக நிறுவனங்கள் முதலீடுகளுக்காக வங்கிகளில் பெறும் கடன்கள் கடினமானதாக மாறியது.
வங்கிகளின் சீர் குலைவே காரணம்
அதே சமயம், விவசாயிகளும் சாமானிய மக்களும் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். இதன் வெளிப்பாடாக, நவீன வரலாற்றின் மிக மோசமான பொருளாதார பின்னடைவை உலகம் சந்தித்தது .
பெர்ன் னான்க் ஆய்வு முடிவுகளுக்கு முன்னர், “பொருளாதார சரிவே வங்கிகளின் நெருக்கடிக்கு காரணம்” என்ற கருத்து உருவாக்கம் இருந்தது. அதற்கு பதிலாக, “வங்கிகளின் சீர் குலைவே பொருளாதாரம் மந்தம் உருவாகவும், ஆழமாகவும்,நீடிக்கவும் காரணம்” என்பதை பெர்ன்னான்க் நிரூபித்தார்.
வங்கிகள் திவாலாகிவிட்டால், வங்கிகளுக்கும் கடன்காரர்களுக்குமான உறவு முறிந்து விடுகிறது. வங்கிகளுக்கும் கடன்காரர்களுக்குமான உறவு, ஓர் அறிவு சார்ந்த முதலீட்டை உள்ளடக்கியது. அது, வங்கிகள் வழங்கியுள்ள கடன்களை திறன்பட நிர்வகிக்க பயன்படுகிறது. வங்கிகளுக்கு அதன் கடன்காரர்களைப் பற்றி நன்கு தெரியும்.
கடன்காரர்களின் விரிவான விவரங்களை வங்கிகள் தங்கள் கையில் வைத்துள்ளன. கடன்காரர்கள், பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? உத்திரவாதமாக திருப்பி செலுத்த என்னென்ன தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது வங்கிகளுக்கு நன்கு தெரியும்.
இத்தகைய அறிவுசார் மூலதனத்தை, ஒரு வங்கி ஈட்ட, கற்றுக்கொள்ள, நீண்ட காலம் தேவைப்படும். வங்கிகள் தோல்வியை தழுவும் போது, அது எளிதாக மாற்றித் தரக் கூடிய ஒன்று அல்ல. ஒரு வங்கி முறை தோல்வி அடைந்து விட்டால், அதனை சரி செய்ய நீண்ட காலம் ஆகும்.
இந்த காலகட்டங்களில் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமானவையாகவே இருக்கும். வங்கிகள் பதட்டம் அடையாமல், வலுவான செயல் திட்டங்களை அரசு உருவாக்கி, செயல்படுத்தாத வரை, வங்கிகள் கூடுதலாக பதட்டமாகி மீண்டும் சரிவதை தடுக்க முடியாது.
வங்கிகள் ஏன் அவசியமாகிறது?
ஒரு வங்கியின் நெருக்கடி, ஏன் சமூகத்தில் அதீத விளைவுகள் உருவாக்குகிறது? என்று தெரிந்துகொள்ள, முதலில் வங்கிகள் என்ன செய்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள் மக்களிடமிருந்து சேமிப்புகளை பெற்று அவற்றை கடனாக கொடுத்து முறைப்படுத்துகிறது.
இந்த நிதி இடைத்தரகு வேலை எளிய, இயந்திரத்தனமான பரிவர்த்தனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், சேமிப்பாளர்கள் தேவைகளுக்கும், முதலீட்டாளர்கள் தேவைகளுக்கும், அடிப்படையில் வேறுபாடு உண்டு. வீடு கட்டவோ, நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ளவோ, கடன் வாங்கி இருக்கும் ஒருவர், கடன் கொடுத்தவர் தன்னிடம் உடனடியாக பணத்தை திருப்பி கேட்க மாட்டார் என்று தெரியும்.
ஆனாலும், அதே சமயம் வங்கிகளில் சேமிப்புகளை வைத்துள்ள ஒருவர், தனது உடனடி தேவைகளுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் சேமிப்பின் ஒரு பகுதி கிடைத்தால் நல்லது என்று கருதுவார்.
சமூகம் ஏதேனும் ஒரு வகையில் இந்த முரண்பாட்டை தீர்த்து வைக்க வேண்டும். நிறுவனங்களையோ குடும்பங்களோ எப்போது கேட்டாலும் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் நீண்ட கால முதலீடுகள் சாத்தியமில்லை. அது பேரழிவு விளைவுகளையே உருவாக்கும்.
உடனடியாக ஏற்கத்தக்க பாதுகாப்பான செலுத்துதல் வசதி இல்லாத நிதி கட்டமைப்பு இருக்குமானால், அங்கு பொருளாதாரம் செம்மையாக செயல்படாது. ஒவ்வொரு முறையும் கடனுக்கு ஷாப்பிங் செய்யும் ஒருவரை, தனது வீட்டின் ஒரு பகுதியை, கடனுக்கான உத்திரவாதமாக எழுதித் தர வேண்டும் என்ற நிலை இருந்தால்,எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதன் மூலம் நல்ல நிதி கட்டமைப்பு வசதியும், வங்கி முறையும் தேவை என்பது தெளிவு.
டக்ளஸ் டைமன்ட் மற்றும் பிலிப் டெப்விக் நோபல் பரிசு பெற என்ன செய்தார்கள் என்பதை நாளை (அக்டோபர் 13) பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
பொருளாதார வல்லுநர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 1
மணிரத்னத்துடன் இணையும் படம் : குழப்பத்தில் ரஜினி?
சிறப்பான கட்டுரை நன்றி.