நா. மணி
நிதி நெருக்கடிகளில் மைய வங்கிகளின் பங்கை விளக்கியோருக்கு 2022 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் பரிசு என்பதை விளக்கும் நோபல் பரிசு குழுவின் எளிய விளக்கம்.
1930களில் ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தம் உலகையே பல ஆண்டுகளுக்கு முடக்கிப் போட்டது.
சமூகத்திலும் பெரும் விளைவுகளை அது உருவாக்கியது. எப்படியோ அந்த நிதி நெருக்கடியை சிறப்பாக சமாளித்து விட்டோம். அதற்காக 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பெர்ன்னான்க், டக்ளஸ் டைமன்ட் மற்றும் பிலிப் டெப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுனர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
பேரளவில் வங்கிகள் நிலைகுலைந்து போவதை தடுப்பதற்கான வழிமுறைகளை இவர்கள் விளக்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வங்கிகளோடு தொடர்பு கொண்டு இருக்கிறோம். நமது வருவாயை வங்கிகளில் தான் போட்டு வைக்கிறோம். நமது செலவினங்களுக்கு வங்கிகள் வழியாகவே பணம் செலுத்தி வருகிறோம் .
மொபைல் ஏப்பு, கடன்,இருப்பு அட்டைகள், என நவீன பணப் பரிவர்த்தனை கருவிகள் வழியாக நாம் செய்யும் அத்துணை செலவுகளுக்கும் வங்கிகள் வழியாகவே பணப் பரிவர்த்தனை நடக்கிறது.
அதேபோல் நம்மில் பெரும்பாலானோர் வங்கிகள் வழியாகவே பெரும் கடன் வசதிகளைப் பெறுகின்றனர். அது வீட்டுக் கடன் அல்லது இதர எந்தவகையான கடனாகவும் இருக்கலாம்.
இதுவே வணிக நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். முதலீடுகள், வரவு, செலவு மற்றும் இதர நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் வங்கிகளையே நம்பியுள்ளோம்.
சில தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்த்து, வங்கிச் செயல்பாடுகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும் சில நேரங்களில் வங்கி முறை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ தோல்வி அடைந்து விடுகிறது.
மிக முக்கியமாக, வங்கிகளில் ஏற்படும் சரிவுகள் காரணமாக கடன்கள் மிகவும் செலவு பிடிப்பதாக மாறுகிறது. அல்லது வங்கிச் சேவைகளே சாத்தியம் அற்றதாகவும் மாறி விடுகிறது.
இதனால் சொத்துக்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு விடுகிறது. இந்த வீழ்ச்சிகளின் விரிவாக்கம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பும் கீழ் நோக்கி சரிந்து விடும்.
இதனால் வேலையின்மை துரிதகதியில் அதிகரிக்கும் . வங்கிகள் திவாலாகும். உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சிகள், பெரும் நிதி நெருக்கடியிலிருந்து உருவானவையே.
வங்கிகள் பற்றிய முக்கிய கேள்விகள்
வங்கிகள் நிலைகுலைந்து போனால் அதனால் பெரும் சேதங்கள் ஏற்படும். அதனை சமாளிக்க முடியுமா?
வங்கிகள் நிலைத்தன்மை அற்றதாக நெகிழ்வானதாக இருக்க வேண்டுமா? ஏன் அவ்வாறு அவை இருக்க வேண்டும்?
சமூகம் எவ்வாறு வங்கிகளின் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும்?
வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடிகள் அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கிறதே அது ஏன்?
வங்கிகள் தோல்வி அடையும் போது புதிய ஒன்றை தோற்றுவிக்க முடியவில்லையே அது ஏன்?
அப்படிச் செய்தால் பொருளாதாரம் தன் சொந்தக் காலில் நின்று பயணப்பட பயன்படும் அல்லவா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி,1980களின் தொடக்கத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற வல்லுனர்களான பெர்ன்னான்க், டக்ளஸ் டைமன்ட் மற்றும் பிலிப் டெப்விக் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர்.
தங்களின் நவீன அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் வழியாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்கள்.
டைமன்ட் மற்றும் டெப்விப் வங்கிகள் ஏன் உள்ளன என்பதற்கான கோட்பாட்டு ரீதியான மாதிரிகளை உருவாக்கினர்.
வங்கிகளின் செயல்பாடு, சமூகத்தில் உலாவரும் வதந்திகள் மூலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அதனால் எவ்வாறு வங்கிகள் நலிவடைகிறது? அது எவ்வாறு வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது? இவ்வாறு நலிவடைவதை சமூகம் எவ்வாறு குறைக்க முடியும்?.
இந்த ஆழமான கேள்விகளுக்கு கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளே இன்றைய நவீன வங்கி முறைமையின் ஒழுங்காற்று விதிமுறைகளை உருவாக்க காரணமாக அமைந்தது.
புள்ளியியல் தரவுகள் அடிப்படையிலான ஆய்வுகள் வழியாகவும் வரலாற்று ரீதியான ஆராய்ச்சி ஆதாரங்களைக் கொண்டும் 1930களில் ஏற்பட்ட மிக மோசமான உலகப் பொருளாதார பெருமந்தத்திற்கு வங்கிகள் எப்படி காரணமாக அமைந்தன என்பதை பெர்ன்னான்க் தனது ஆய்வுகள் மூலம் விளக்கினார்.
வங்கி முறைமையின் சரிவு ஏன் ஆழமானது? அது ஏன் நீண்டகாலம் நீடித்தது? என்பதையும் தனது ஆய்வுகள் விளக்கினார்.
வங்கிகளில் ஏற்படும் நெருக்கடிகள் பொருளாதாரத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்த வல்லது என்பதை பெர்ன்னான்க் தனது ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டுகிறார்.
இவரது கண்டுபிடிப்பு மிகச் சிறந்த வங்கியில் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. இவரது ஆய்வுகள் 2008-2009 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் போது பொருளாதார கொள்கை வகுப்பதற்கு பின்புலமாக இருந்தது.
இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக பெர்ன்னான்க் இருந்தார் . இதன் காரணமாக ஆராய்ச்சி அறிவிற்கும் கொள்கை வகுப்பிற்கும் ஓர் தொடர்பை உருவாக்க முடிந்தது.
பின்னர் 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந் தொற்று வந்தபோது உலகப் பொருளாதாரத்தை அது பெருமளவு பாதிக்காமல் தவிர்க்கவும் இது பயன்பட்டது.
இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளும் பெருந் தொற்றுக்கு பிறகு புதிய பொருளாதார மந்தம் தோன்றாமல் தடுக்கவும் சமூகத்தில் பெரும் சீரழிவுகளை தடுக்கவும் காரணமாக அமைந்தது.
வங்கிகளின் நெருக்கடிகள் எப்படி பொருளாதார மந்தத்திற்கு காரணமாக அமைந்தது?
நாளை – அக்டோபர் 12
கட்டுரையாளர் குறிப்பு
நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?
முதல்வரின் தமிழ்மொழி கரிசனம் – அழுவதா? சிரிப்பதா?: அண்ணாமலை விமர்சனம்!