டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேற்று (மார்ச் 21) இரவு 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் விடிய விடிய தஞ்சம் அடைந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் பலரும், அவர்களது வீட்டில் இருந்த டிவி, நாற்காலி, மின்விசிறி மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் உட்பட அனைத்து பொருட்களும் குலுங்கியதாகத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி தீயணைப்புத் துறை, கட்டிடங்கள் குலுங்குவது தொடர்பாக தங்களுக்கு மக்களிடம் இருந்து சில அழைப்புகள் வந்ததால், தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் பணிக்காக சம்பவ இடங்களுக்கு விரைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் ஃபைசபாத்தில் இருந்து தென்கிழக்கே 133 கிமீ தொலைவில் இருந்து இரவு 10.17 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், பெஷாவர், சர்சத்தா, லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தானில் 9 பேரும், பாகிஸ்தானில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோனிஷா
உக்ரைனில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர்!
தேர்தலைப் புறக்கணிப்போம்: பழங்குடி இருளர்களின் முடிவுக்கு காரணம் என்ன?