பஞ்சாப் முதல்வரை விமர்சனம் செய்திருக்கும் எதிர்க்கட்சிக்கு, ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.
பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வருக்கு எதிராக பஞ்சாப்பில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறது.
இந்த நிலையில், அக்கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் இன்று (செப்டம்பர் 19) பஞ்சாப் முதல்வர் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில், “விமானத்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் இருந்த பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.
லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்கக்கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாகச் சென்றது.
இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் அதனை பகவந்த் தவற விட்டுள்ளார்.
இந்த செய்திகள், உலகம் முழுவதும் உள்ள பஞ்சாப் மாநில மக்களை அவமதிப்புக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அமைதி காக்கும் பஞ்சாப் அரசு, இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுப்படுத்த வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநில முதல்வர் குறித்து விமர்சித்துள்ளது.
இதற்கிடையே, ’விமானங்களின் வருகையில் மாற்றம் ஏற்பட்டதால்தான், செப்டம்பர் 19 அன்று, விமானம் தாமதமாக டெல்லிக்கு வந்து சேர்ந்தது’ என லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
’இதைவைத்தே ஆம் ஆத்மி கட்சியும், பஞ்சாப் முதல்வரைப் பற்றிச் சொல்லும் அனைத்துத் தகவல்களும் ஆதாரமற்றவை’ என விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங், “திட்டமிட்டபடி செப்டம்பர் 19ம் தேதி பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் திரும்பினார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் சில முதலீடுகளை திறம்பட முதலமைச்சர் பகவந்த் மான் பெறுவதால், எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!