2020-ஆம் ஆண்டை அவ்வளவு எளிதாக நம்மால் பலராலும் மறந்துவிட முடியாது. ஒரு தலைமுறை பார்க்காத பெருந்தொற்று கொரோனா என்னும் வடிவில் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடியது. லாக்டவுன், வாக்சின், மாஸ்க் என அதிகம் புழக்கம் இல்லாத வார்த்தைகளை இந்திய மக்கள் ஒவ்வொரு நாளும் பேச வேண்டியதாக மாறிவிட்டது.
எப்போது லாக்டவுன் முடிந்து வீட்டை விட்டு வெளியேறுவோம் முகக்கவசத்திலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை எப்போது சுவாசிப்போம் என்ற கேள்விகளும் எண்ணங்களும் தான் மக்கள் மனதில் எழுந்தன. கொரோனா இந்தியாவுக்கு ஒரு பேரழிவை ஏற்படுத்திவிட்டு போனது. குறிப்பாக இரண்டாம் லாக்டவுனின் போது கொரோனா தாக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் செய்தியும் உயிர் பயத்தையும் பதட்டத்தையும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்படுத்த தவறவில்லை.
இந்தியாவில் கொரோனா
இதுவரை கண்டிராத அந்த கொடூர கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்ம் உலக நாடுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்தன. புலம்பெயர் தொழிலாளர்கள் இறப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ பணியாட்கள் பற்றாக்குறை என விமர்சனங்கள் ஒருபுறமும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், ரூ.1000 நியாய விலை கடைகளில் கொடுத்தது, மாத தவணை செலுத்த தளர்வுகள் அறிவித்தது போன்ற நடவடிக்கைகள் பாரட்டப்பட்டது.
தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் மட்டும் தான் கொரோனாவிற்கு எதிரான ஒரே மருந்தா என்று இந்தியர்கள் எண்ணிக்கொண்டிருந்தபோது கோவிட் மருந்து தயாரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அதன் விளைவால் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் எப்படி செலுத்துவது என்று மக்கள் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தடுப்பூசி செலுத்தினர். மக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தனர். இதனால் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில் தான் உலகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்தை கண்டுபிடித்த இருவருக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. எம்ஆர்என்ஏ கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த பேராசிரியர் காட்டலின் காரிகோ, ட்ரூ வேஸ்மன் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நோபல் பரிசு கமிட்டி இவர்கள் குறித்து கூறும்போது, “காட்டலின் காரிகோ, ட்ரூ வேஸ்மன் ஆராய்ச்சியின் மூலம் எம்ஆர்என்ஏ நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய புரிதலை அடிப்படையில் மாற்றியுள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவிற்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து பங்களித்தனர்” என்று தெரிவித்துள்ளனர்
எம்ஆர்என்ஏ தடுப்பூசி என்றால் என்ன?
இறந்த அல்லது பலவீனமான வைரஸ்கள் மனித உடலில் நுழையும் போது தடுப்பூசிகள் வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை நமது உடலில் உருவாக்கும். வைரஸ் ஒருவரை தாக்கும் போது நமது உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அதை எதிர்த்து போராட துவங்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
எம்ஆர்என்ஏ என்பது மெசஞ்சர் ஆர்என்ஏவைக் குறிக்கிறது. இது நியூக்ளிக் அமிலத்தின் ஒரு வடிவமாகும். மரபணு தகவலைக் கொண்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளைப் போலவே, எம்ஆர்என்ஏ தடுப்பூசியும் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தி, உயிருள்ள வைரஸிலிருந்து தொற்றுநோயை எதிர்கொள்ள உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்க முயற்சிக்கிறது.
எம்ஆர்என்ஏ தடுப்பூசியை பயன்படுத்தி மாடர்னா, பைசர், கோவாக்சின் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
யார் இந்த காட்டலின், வெய்ஸ்மேன்
காட்டலின் காரிகா 17.01.1955-ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்தார். அவர் 1982 இல் ஹங்கேரியில் உள்ள Szeged’s பல்கலைக்கழகத்தில் தனது PhD பட்டப்படிப்பை முடித்தார். 1989 இல், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பயோஎன்டெக் ஆர்என்ஏ பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் பின்னர் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 2021 முதல், அவர் Szeged பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
நானும் வெய்ஸ்மேனும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டவர்கள் என்றாலும் ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றினோம் என்று காரிகோ தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்றது குறித்து காரிகோ பேசும்போது, “10 வருடங்களுக்கு முன்பு எனது தாயார் நோபல் பரிசு அறிவிப்புகளை கேட்கும்போது ஒரு நாள் உனது பெயரும் இதில் வரும் என்பார். நான் அப்போது சிரிப்பேன். நோபல் பரிசு அறிவிப்புகளை கேட்காதீர்கள் என்பேன். ஏனென்றால் நான் யாருடனும் சேர்ந்து அப்போது ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. நீ கடினமாக உழைக்கிறாய் என்று கூறுவார். விருது எனக்கு அறிவிக்கப்பட்டபோது யாரோ கால் செய்து ஜோக் செய்கிறார்கள் என்று தான் நினைத்தேன்.
58 வயதில் ஆராய்ச்சி பணியை முடித்தேன். இபோதும் பிளாஸ்மாக்களையும் செல்களையும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். 16 வயதில் ஹன்ஸ் செய்ல் எழுதிய புத்தகத்தை படிக்கும் போது தான் அறிவியலின் மீதான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிற செயலில் கவனம் செலுத்துங்கள். பல இளைஞர்கள் அதனை விட்டுவிடுகிறார்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று அடுத்ததை தேடுவதில் உங்கள் முழு சக்தியையும் செலவிட வேண்டும். நானும் வெய்ஸ்மேஸ்மேனும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டவர்கள். இருப்பினும் இணைந்து பணியாற்றினோம்” என்று காரிகோ தெரிவித்தார்.
ட்ரூ வெய்ஸ்மேன்
ட்ரூ வெய்ஸ்மேன் 7.8.1959 இல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார். 1987 இல் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது MD, PhD பட்டங்களைப் பெற்றார். அவர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தில் தனது மருத்துவப் பயிற்சியையும், தேசிய சுகாதார நிறுவனங்களில் முதுகலை ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1997 இல், வெய்ஸ்மேன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் தனது ஆராய்ச்சிக் குழுவை நிறுவி மருத்துவ துறை சார்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
எம்ஆர்என் தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாட்கள் தூக்கத்தை இழந்ததாக வெய்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
வெய்ஸ்மேன் கூறும்போது, “சில கூட்டங்களுக்கு போகும்போது என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று என்னிடம் கேட்பார்கள். எம்ஆர்என்ஏ தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினால் உங்கள் நேரத்தை கொண்டு நீங்கள் ஏன் பயனுள்ள ஒன்றை செய்ய கூடாது… எம்ஆர்என்ஏ ஒருபோதும் வேலை செய்யாது. ஆனால் நானும் காட்டலிலினும் தொடர்ந்து எங்கள் பயிற்சியை மேற்கொண்டோம்.
விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. யாராவது பிராங் கால் செய்கிறார்களோ என்று நினைத்தேன். விருது பட்டியலில் எனது பெயரை பார்த்த பிறகு தான் உண்மை என்று நம்பினேன். கனவு நிறைவேறியது போல் உள்ளது. எம்ஆர்என்ஏ தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக 20 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் உழைத்தோம். இதனால் பல நாள் தூக்கத்தை இழந்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
எதிர்மறை கருத்துக்கள் பல வந்தாலும் தங்களது ஆராய்ச்சியில் உறுதியாக இருந்து உலகின் தினம்தோறும் தடுப்பூசி மூலம் மனித உயிர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கும் காட்டலின், வெய்ஸ்மேன் மருத்துவதுறையின் அடையாளமாய் மாறியுள்ளார்கள்.
மேலும் மருத்துவத்துறையில் சாதிக்க நினைக்கும் பல கோடி இளைஞர்களின் லட்சியத்தியத்திற்கும் உத்வேகத்தின் அடையாளமாய் நோபல் பரிசை கையில் ஏந்தியுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!
சூர்யாவின் முதல் ஹிந்தி படம் “கர்ணா”
இது ரொம்பத் தப்புங்க, என்னதான் இருந்தாலும் எங்க ஜியின் ஆலோசனைப்படி, நாங்கெல்லாம் தட்டுல டபடபனு தட்டி, வாசல்ல விளக்கேத்தி வெச்சதுனாலதான் கொரோனா எங்க நாட்டுல கட்டுபட்டுச்சு. அதுக்கே அவருக்குத்தான் நோபல் கொடுக்கனும்க…