வட இந்தியாவில் முதன்முறையாக இளம் பெண்ணுக்கு இரு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியின் 76 வயது மனைவி காலமானார். அவரின் பல உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அந்த வகையில், அவரின் இரு கரங்களும் தானம் செய்யப்பட்டன. இந்த கரங்கள் விபத்தில் கரங்களை பறி கொடுத்த ட்விங்கிள் டோக்ராவுக்கு பொருத்தப்பட்டன. பரிதாபாத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு ட்விங்கிள் டோக்ரா கரங்களை பெற்றார். 38 வயதான ட்விங்கிள் டோக்ரா விபத்து ஒன்றில் கரங்களை இழந்தவர். பி.ஹெச்.டி படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு கரங்கள் மீண்டும் கிடைத்தது குறித்து ட்விங்கிள் டோக்ரா கூறுகையில்,’ மீண்டும் ஒரு முறை என் கரங்களால் என் குழந்தையை அணைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு கரங்களை கொடுத்த மறைந்த அம்மாவுக்கும் மருத்துவக்குழுவினருக்கு மனதார நன்றி . முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் கரங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பற்றி கேள்விப்பட்ட போது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. தற்போது, எனக்கு இரண்டாவது முறையாக வாழ்க்கை கிடைத்துள்ளது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அமிர்தா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உறுப்பு மறு சீரமைப்பு துறை தலைவர் மோகித் சர்மா கூறுகையில், ‘இந்தியாவில் 8 மையங்களில் கை மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். உலகில் கை மாற்று அறுவை சிகிச்சையில் 40 சதவிகிதம் இந்தியாவில் நடைபெறுகிறது ‘என்கிறார்.
இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் மனு என்பவருக்கு இரு கரங்களும் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது. ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண் பயணி ஒருவரிடத்தில் இளைஞர்கள் கும்பல் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது. அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மனு ஈடுபட்டார். இந்த தருணத்தில் அந்த பெண் தப்பி விட்டார்.
இதையடுத்து, அந்த கும்பல் மனுவை அடித்து ரயிலில் இருந்து தூக்கி வீசியது. இந்த சம்பவத்தில் தனது இரு கரங்களையும் மனு இழந்தார். மனுவின் மனிதாபிமான செயலையடுத்து மாதா அமிர்தானந்த மயி மடம் சார்பில் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அமிர்தா மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இரு கரங்களும் பொருத்தப்பட்டன.