ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு டின்னர் சாப்பிட சென்ற தன்னை தடுத்த குஜராத் போலீஸார் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கோபத்துடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சியை நிலைநிறுத்த டெல்லி முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
எங்க வீட்டுக்கு சாப்பிட வருவீங்களா?
இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுபயணமாக குஜராத் சென்றுள்ள கெஜ்ரிவால், நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் லால்தனி என்பவர், ”நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். பஞ்சாபில் நீங்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் உணவு அருந்தியதை பார்த்து இருக்கிறேன்.
அதேபோல எனது வீட்டுக்கும் சாப்பிடுவதற்கு வருவீர்களா?” என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”நான் நிச்சயமாக உங்களது வீட்டுக்கு வருகிறேன். நான் உங்களது வீட்டுக்கு இன்று இரவே சாப்பிட வரலாமா? என்னுடன் கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் வருவார்கள். நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வந்து என்னை நீங்கள் உங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உங்களது வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்றார். இதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் வருவதாக தெரிவித்திருந்தார்.
கடும் கோபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்!
அதன்படி, இரவு 7.30 மணியளவில் கெஜ்ரிவால் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த லால்தனி, அவர்களை ஆட்டோவிலேயே தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
சிறிது தூரத்தில் கெஜ்ரிவால் பயணித்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய குஜராத் போலீசார், பாதுகாப்புக் காரணங்களை கூறி, அவரை லால்தனி வீட்டு டின்னருக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
இதில் கோபமடைந்த கெஜ்ரிவால், “எனக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை. நான் மக்களிடம் செல்ல விரும்புகிறேன். நீங்கள் என்னைத் தடுக்கிறீர்கள். குஜராத்தில் இது ஒரு பாதுகாப்பு நெறிமுறையா? நீங்கள் என்னை தடுப்பது, நான் கைது செய்யப்படுவதற்கு சமம். நீங்கள் என்னை கைது செய்ய முடியாது. நான் ஏன் ஆட்டோவில் பயணிக்க அனுமதியில்லை?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
பின்னர் நீண்ட விவாதத்திற்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோவில், போலீஸுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் லால்தனி வீட்டிற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தினார்.
மேலும், குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் இத்தாலியா மற்றும் கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளர் இசுதன் காத்வி ஆகியோரும் லால்தனி வீட்டில் உணவருந்தினர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையே டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, ”டெல்லியில் தனது அரசாங்கம் செய்த “ஊழலில்” இருந்து கவனத்தை திசை திருப்ப கெஜ்ரிவால் குஜராத்தில் புதிய வித்தையை காட்டியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல், குஜராத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான ஹர்ஷ் சங்வி, போலீசுடன் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதை குறிப்பிட்டு “என்ன ஒரு நடிகர்” என்று ட்வீட் செய்துள்ளார்
கிறிஸ்டோபர் ஜெமா
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: முதல்முறையாக வாக்காளர் அட்டை!