மது அருந்துபவர்களுக்கு மகள்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியுள்ளார்.
போதைக்கு அடிமையாதல் குறித்த நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் ”ஒரு குடிகாரர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு” என கூறினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “எம்.பி.யாக இருந்த நானும், எம்.எல்.ஏ.வாக இருந்த எனது மனைவியும் எங்களது மகனின் உயிரைக் காப்பாற்றாத போது, பொது மக்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள்.
என் மகன் ஆகாஷ் கிஷோருக்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததால், போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்து விட்டோம்.
அந்த கெட்டப் பழக்கத்தை விட்டுவிடுவார் என்று நினைத்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். இறுதியில் மதுப் பழக்கம் அவர் உயிரைப் பறித்து விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 19 அன்று, ஆகாஷ் இறந்தபோது, அவரது மகனுக்கு இரண்டு வயதுதான்.
என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை, அதனால் அவனுடைய மனைவி விதவையானார். இதிலிருந்து உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோய் இறப்புகளில் 80 சதவிகிதம் புகையிலை, சிகரெட் மற்றும் ‘பீடி’க்கு அடிமையாவதால் ஏற்படுகிறது.
போதை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களது குடும்பங்களைக் காப்பாற்றுங்கள். மாவட்டத்தைப் போதையில்லா மாவட்டமாக மாற்றப் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
இது தொடர்பான ஆலோசனைகளைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்” என்று பேசினார்.
மோனிஷா
”கேங்ஸ்டா”: துணிவு 3வது சிங்கிள்!
இந்தி திணிப்பு : நக்கலுடன் எச்சரித்த கமல்