ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கைக்குச் சென்றுள்ளது என்று எலான் மஸ்க்கை புகழ்ந்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்.
உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் சில காரணங்களைக் கூறி ட்விட்டரை வாங்கவில்லை என்று அறிவித்த எலான் மஸ்க் தற்போது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களுடன் ட்விட்டரையும் தனது பெயருடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள ட்ரம்ப், “ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கைக்குச் சென்றுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்ட நிலையில், புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ட்ரம்பின் அனைத்துக் கணக்குகளையும் முடக்கிய நிலையில் ட்விட்டர் நிறுவனம் அவருக்கு நிரந்தர தடையை விதித்தது.
இந்த நிலையில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து முன்பே சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் ட்ரம்ப், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்கை பாராட்டியிருப்பது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
-ராஜ்
கிச்சன் கீர்த்தனா: உணவில் உப்பு… ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?