டோலோ 650 மாத்திரை உற்பத்தி நிறுவனம், தங்கள் மருந்துகளைப் பரிந்துரை செய்வதற்காக மருத்துவர்களுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு இலவசங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக, மருந்துகள் விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 18) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர் பரிக் வாதாடும்போது, “500 மி.கி அளவுள்ள மாத்திரைகளுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கின்றனர்.
ஆனால் 500 மி.கிராம் அளவுக்கு அதிகமான எடையுள்ள மாத்திரைகளுக்கு மருந்து நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
இதன் காரணமாக டோலோ 650 மாத்திரை நிறுவனம் தங்களது மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, ரூ.1000 கோடி மதிப்பிலான இலவசங்களை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்சியடைந்த நீதிபதி சந்திரசூட், “சமீபத்தில் நான் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோது, டோலோ 650 மாத்திரையை தான் எடுத்துக்கொண்டேன்.
நீங்கள் கூறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும்” என்றார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் ‘டோலோ 650 மாத்திரை நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஜூலை மாதம் 6- தேதி டோலோ 650 மாத்திரை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
இதில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மணிகண்ட்ரோல் செய்தி ஊடகத்திற்கு டோலோ 650 சந்தைப்படுத்துதல் நிறுவன துணைத் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜூ பதிலளித்துள்ளார்.
“டோலோ 650 நிறுவனம் தங்களது மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு 1000 கோடி ரூபாய் அளவில் இலவசங்களை வழங்கியது என்பது மிகைப்படுத்தப்பட்ட, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
கொரோனா காலகட்டத்தில் ரூ.350 கோடி மட்டுமே எங்களுக்கு வருவாய் கிடைத்தது.
அப்படி இருக்கும் போது எங்களால் எப்படி ரூ.1000 கோடி இலவசமாக மருத்துவர்களுக்கு வழங்க முடியும். 500 மி.கி அளவுக்கு மேல் உள்ள டோலோ 650 மாத்திரைகளும் மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே விற்பனை செய்யப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார். .
செல்வம்