டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்… வரலாறு காணாத வீழ்ச்சி!

Published On:

| By Minnambalam Login1

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால் இறக்குமதி செய்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சந்தை வர்த்தகத்தில் பெரும்பாலாக உலகம் முழுக்க புழங்கும் அமெரிக்க டாலருக்கும் ஒரு நாட்டின் நாணயத்திற்கு இடையேயான மதிப்பு மிக முக்கியம்.

ஏன் என்றால், டாலருக்கு நிகரான ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைந்தால், அந்த நாட்டின் இறக்குமதிக்கு ஆகும் செலவு பல மடங்கு கூடும். இதனால் அந்த நாட்டின் நிதி பற்றாக்குறையே பாதிக்கும்.

உதாரணத்திற்கு 1 டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.50 என்று வைத்துக்கொள்வோம். 1 டாலர் மதிப்பிலான ஒரு பொருளை நாம் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு நாம் ரூ.50 கொடுக்க வேண்டியிருக்க வேண்டும்.

அதுவே 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.100 என்று குறைந்துவிட்டால், நாம் ரூ.100 கொடுத்துத்தான் அதே பொருளை இறக்குமதி செய்ய முடியும். இது ஒரு எளிய உதாரணம் தான்.

நீங்கள் கேட்கலாம், 1 டாலர் நிகரான மதிப்பு ரூ.100 என்றால் அது உயர்வு தானே என்று. நாம் இங்கு குறைவு என்பது சொல்வது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை தான். அதாவது முன்னர் நாம் ரூ.50 கொடுத்தால் ஒரு டாலர் கிடைக்கும். ஆனால் மேலே குறிப்பிட்ட உதாரணத்தில், ரூ.100 கொடுத்தால் தான் 1 டாலர் கிடைக்கும் என்பது ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதை குறிக்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு உயரும், சரியும். அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி இதை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபரின் தேர்தலால் இந்திய ரூபாய்க்கான டாலரின் மதிப்பு கூடுவதும் குறைவதுமாக இருந்தது. டிரம்ப் அதிபராக தேர்வானதை அடுத்து, டாலரின் மதிப்பு கூடிவந்தது. அதுமட்டுமல்லாமல் கிரிப்டோ கரன்சியான ஒரு பிட்காயினின் மதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு 100,000 டாலர் உச்சம் தொட்டது.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83, 84 என்று இருந்த நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் ரூ.85.41க்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தலையிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அப்துல் ரஹ்மான்

மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!

‘என் மகனே இறந்து போயிட்டான்’- நடிகை திரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel