திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வருமான வரித்துறையின் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) தடை விதித்துள்ளது.
தமிழக அமைச்சரும், தி. மு. க பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2013 – 2014 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017 ம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு வந்த போது, கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக எம்பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கதிர் ஆனந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ். கணேஷ் மற்றும் பி. வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் தங்களது வாதத்தில்,
“மனுதாரார் நீட்டிக்கப்பட்ட நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஐடி துறை அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிலுவைத் தொகை, அபராதம் மற்றும் வட்டியுடன் வரியையும் செலுத்திவிட்டார்.
நோட்டீஸ் இல்லாமல் தானாக முன்வந்து ரிட்டர்ன் தாக்கல் செய்வது குற்றவியல் விசாரணைக்கு உட்படாது என்று கூறும் பிற தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை” என்று வாதிட்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, திமுக எம்பி கதிர் ஆனந்த் மீதான வருமான வரித்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி தம்பி கைது: அமலாக்கத்துறை மறுப்பு!
திருநாவுக்கரசு செய்தது மிகப்பெரிய பாதகம்: செல்லூர் ராஜூ