நா.மணி
கலாச்சாரச் செயல்பாடுகள் நிறைந்தது நம் நாடு. பிறந்தது முதல் இறப்பு வரை பல்வேறு கலாச்சாரச் செயல்பாடுகளோடு நாம் பின்னிப் பிணைந்திருக்கிறோம். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் கலாச்சாரச் செயல்பாடுகளிலிருந்து பங்கேற்காமல் தள்ளி நிற்பது என்பது தவிர்க்க இயலாதது.
கலாச்சாரச் செயல்பாடுகளில் பல வடிவங்கள் உள்ளன. தனிமனித, குடும்ப விழாக்கள் தாண்டி, சமூகக் கலாச்சார விழாக்கள் நிரம்பியிருக்கின்றன. அதேபோல் கடவுள் நம்பிக்கை சார்ந்த, மத நிறுவனங்கள் சார்ந்த, கலாச்சாரச் செயல்பாடுகளும் ஏராளம்.
இவை எல்லாவற்றிலும் பொருளாதார சுழற்சியும், அதன் சுழற்சி வேகமும் பொருளாதாரக் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருவிழாக்கள், கலாச்சாரச் செயல்பாடுகள் போன்றவை, பொருளாதார வளர்ச்சிக்கு கிரியா ஊக்கி.
மேற்கு வங்க துர்கா பூஜை பொருளாதாரம்
மேற்கு வங்காளத்தில் நடக்கும் துர்கா பூஜை திருவிழாவில் 32,377 கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இது அம்மாநிலத்தின் உள்ளாட்டு உற்பத்தி மதிப்பில் 2.58 விழுக்காடு என்று பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
துர்கை அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் செய்வதில் மாத்திரம் 260 முதல் 280 கோடி ரூபாய் புழங்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஒரு மாநிலத்தின் ஒரு கலாச்சார நிகழ்வு அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் எனில் தீபாவளி பொருளாதாரம் பற்றி சொல்லவா வேண்டும்?
தீபாவளி பண்டிகையின் பொருளாதார உள்ளீடுகள்
தீபாவளி பண்டிகையின் பல்வேறு வகையான பொருட்களின் விற்பனையைப் பொறுத்து, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் இருக்கும் என்று சாமானியரும் அனுமானிக்க முடியும்.
தொழிற்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார மீட்சி ஆகியவை,எவ்வாறு இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் இன்றியே கூட கணக்கீடு செய்து விட முடியும். புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு சில நேரங்களில் அவை மிகப் பழைய புள்ளிவிவரங்களாக மாறிவிடும்.
பயன்பாடு மிகவும் குறைவாகவும் இருக்கலாம். இதுவரை செய்யப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால்கூட, முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தீபாவளி விற்பனை, கடந்த ஆண்டைக் காட்டிலும் 27 விழுக்காடு கூடியுள்ளது.
சில்லறை விற்பனையின் பண மதிப்பில் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. வர்த்தகம் 2.5 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வாகனங்கள் விற்பனை 57 விழுக்காடு அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8 முதல் 10 விழுக்காடு விற்பனை கூடியுள்ளது.
கிராமப்புற தேவை 3.7 விழுக்காடு கூடியுள்ளது. தீபாவளி நேரத்தில் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வது மட்டுமே ரூபாய் 5 கோடி இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 30 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளதாக அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பண்டிகையால் தூண்டப்பட்ட விற்பனை 1.25 டிரில்லியனிலிருந்து 2.50 டிரில்லியனாகக் கூடியுள்ளது என்றும் ஒரு மதிப்பீடு கூறுகிறது.
தீபாவளியின் பரிமாணங்கள்:
தீபாவளி பண்டிகை, நுகர்வை மட்டுமே தூண்டி விடவில்லை. நுகர்வு, உற்பத்தி, விற்பனை, வருமானம், வேலைவாய்ப்பு என எல்லாக் காரணிகளையும் தூண்டி விடுகிறது. நேரடி பொருளாதார விளைவுகள், மறைமுகப் பொருளாதார நன்மைகள், கூடுதல் மறைமுகப் பொருளாதார நன்மைகள் பல்வகை பொருளாதார நன்மைகள் கிட்டுகிறது.
வேலைவாய்ப்புகள், முதலீடுகள் தூண்டப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சிக்கு ஓர் அச்சாணியாகச் செயல்படுகிறது. தீபாவளியின் பொருளாதார நன்மைகள் வெளிப்படையாகவும், சமூக விளைவுகள் கண்ணுக்குத் தெரியாமல் அமைந்திருக்கிறது.
அவ்வாறு நேரிடையாக கண்ணுக்குத் தெரியாத சமூக சார்ந்த நன்மைகளை சுருக்கமாக பட்டியலிட முடியும். அதுவே தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக நிலைக்க காரணமாகிறது.
தீபாவளி பண்டிகையில் நம்மை நாம் இணைத்துக்கொள்வதே ஒரு சமூக கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. அது நேரிடையாகவும் மறைமுகமாகவும் புதிய விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அதில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கற்றலும் நிகழ்கிறது. சமூக உறவுகள் பலப்படுத்தப்படுகிறது. உறவு ஒன்று கூடுதல், உறவு புதுப்பிக்கப்படுதல், கூடி மகிழ்தல் என எல்லாம் நிகழ்கிறது.
கலாச்சாரச் செயல்பாடுகள் பண்டிகைகள் வழியே அதுவும் குறிப்பாக தீபாவளி போன்ற உச்சஸ்தாயில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பெரும் பொருளாதாரச் சுழற்சி நடக்கிறது. பொருளாதாரத்தில் நடக்கும் சிறு சிறு தொய்வுகளைத் துடைத்தெறியும் வல்லமை அவற்றுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு வணிகத்துக்கு, ஒரு பொருளின் உற்பத்தியாளனுக்கு, ஆண்டு முழுவதுக்குமான உற்பத்திக்கு, விற்பனைக்கு, தீபாவளி போன்ற பெரும் சந்தை திருவிழா போதும் என்று வைத்துக்கொள்வோம்.
தீபாவளி சந்தையில் எல்லோருக்கும் லாபம் கிடைக்கிறதா?
இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் தீபாவளி என்னும் திருவிழா சந்தையில், லாபம் ஈட்ட முடிகிறதா? அதனால் சுகம் யாருக்கு? சுமை யாருக்கு? ஒரு சிறிய பரிசீலனையேனும் வேண்டுமல்லவா?
மொத்த இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. உலகப் பட்டினி குறியீட்டில் இந்தியா 107 ஆவது இடத்தில் உள்ளது. எண்ணிக்கையில், வறுமையில் உழல்வோர் 22.89 கோடி பேர். மொத்த மக்கள் தொகையில், வருவாய் படிநிலையில், கடைசி 50 விழுக்காடாக உள்ள இந்தியர்களின் வருவாய், மொத்த இந்திய தேசிய வருமானத்தில் 13 விழுக்காடு மட்டுமே.
இவர்கள் இப்போது எப்படி தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள்? தீபாவளியை மற்றவர்களைப் போல், தன் குடும்பத்தோடு கொண்டாட எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள்? அதற்கு எத்தனை மாதம் தவணை செலுத்த வேண்டியிருக்கும்? வட்டி விகிதம் என்ன? பலருக்கும் இந்த கடனைக் கட்டி முடிக்கும் முன்பே அடுத்த தீபாவளி வந்து விடும் அல்லது அடுத்த திருவிழா வந்துவிடும்.
அது தவிர்த்து சொந்த சுப துக்க காரியங்கள் அதன் செலவுகள் தொடரும். வட்டியும் முதலும் குறைய குறைய, கடனும் வட்டியும் குன்றாமல் அதே அளவு இருக்கும் அல்லது மேலும் எகிறி குதிக்கும். இவற்றையும் பரிசீலனை செய்ய வேண்டும். ஓர் இந்தியக் குடிமகனின் தீபாவளி கொண்டாட்டம், தன் வருவாயின் சிறு துளி. அதுவே மற்றொரு இந்தியக் குடிமகனுக்கு, மீளா கடன் சுமையின் நுகத்தடி.
பண்டிகை கால சுமைகள் எவ்வளவு சுமையாக இருந்தாலும் அதில் சுகம் இருக்கிறது. அது தேவையாக இருக்கிறது. ஓடி ஓடி களைத்துப் போன மக்களுக்குச் சிறிது இளைப்பாறவும், தொடர்ச்சியான கஷ்டங்கள் மத்தியில், கொஞ்சம் களிப்படைந்து இளைப்பாறிக் கொள்ளவும், இது போன்ற விழாக்கள் பண்டிகைகள் தேவைப்படுகிறது.
தீபாவளியும் கடன் சுமையும்
தீபாவளியின் சமூகப் பொருளாதார நன்மைகளில், உழைக்கும் மக்களுக்கு தீபாவளி நாள் செலவுகள் வருடம் முழுவதும் கடன் சுமை. கடும் அவஸ்தை என்ற நிலை சரியா என்ற கேள்வியையும் வலுவாக எழுப்ப வேண்டியுள்ளது.
ஐந்து ரூபாய் பட்டாசும் கல்லூரி கட்டணமும்
இக்கட்டுரையாளர், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, பட்டாசு வாங்கிக் கொள்ள அவரது தந்தை ஐந்து ரூபாய் கொடுத்தார். அதனை பட்டாசு வாங்கச் செலவு செய்யாமல், இரண்டு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். இரண்டும் பெரிதானவுடன் அவற்றை விற்று நான்கு கோழிக் குஞ்சுகள் வாங்கி வளர்த்தார். இது இப்படியே வளர்ந்து பெருக்கம் அடைந்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேரப்போகும் போது முதலாண்டு கட்டணம் முழுவதற்கும் சரியாக இருந்தது.
இந்திய பட்டாசு சந்தையின் மதிப்பு ரூபாய் 5,000 கோடி என்றும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பட்டாசு தடை செய்யப்பட்டதால் ரூபாய் 50,000 கோடி நஷ்டம் என்கிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் இத்தகைய செலவுகளில் ஒரு பகுதியை சிறு சேமிப்பாக மாற்றினால் பெரும் பயன் கிட்டும். ஆனால் இத்தகைய சிறு சேமிப்புகளுக்கு வழியின்றியும் வாய்ப்பு தராமலும் உள்ளூர் முதல் தேசிய திருவிழாக்கள் வரை உழைக்கும் மக்களின் வருமானத்தை காவு கொண்டு விடுகிறது.
கண்டு பாவனை பொருளாதாரம்
திருவிழாக்களில் செலவுகள் அதன் நடைமுறைகள் எல்லாம் கண்டு பாவனையாகவே இருக்கிறது. இதனை டியூஷன் பெரி என்ற பொருளாதார அறிஞர் Demonstration Effect என்றார். நமக்கு மேல் இருப்பவரைப் பார்த்து நாமும் அதேபோல் செய்வது. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர், ஒரு மாத சம்பளம் முழுவதையும் தீபாவளி செலவாகச் செய்தால் அவருக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் அதனை முழுவதுமாக செலவு செய்து அதுவும் போதாமல் கடனையும் வாங்கி செலவு செய்து விட்டால் கடனுக்கான வட்டியும் தீபாவளி செலவில் தானே சேரும். ஒரு நாள் கொண்டாட்டம் அதைத் தொடர்ந்து ஆண்டு முழுவதும் திண்டாட்டம் என்று இருக்கும் மக்களுக்கு என்ன செய்யலாம். பண்டிகைகள் வேண்டும். அளவுக்கு மிஞ்சிய கண்டு பாவனை செலவுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
பட்டாசு கலாச்சாரத்துக்கு மாற்று
பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கு என்றால் மக்கள் மகிழ்ச்சிக்கு மாற்று என்ன என்பதும் கண்டறியப்பட வேண்டும். பசுமை தீபாவளி என்று கூறினால் மட்டும் போதுமானதல்ல. பட்டாசு கொளுத்துதலுக்கு நிகரான மகிழ்ச்சி தரும் மாற்றுச் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்ட வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் இந்த பட்டாசு வெடிக்க டெல்லி அரசு விதித்திருக்கும் தடையை 61 விழுக்காடு மக்கள் வரவேற்கிறார்கள். அதேசமயம், பத்து விழுக்காடு குடும்பங்கள் பட்டாசுகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
இரண்டு வீட்டுக்கு ஒரு வீடு பட்டாசு வெடிக்கிறார்கள், 20 விழுக்காடு குடும்பங்கள் டெல்லிக்கு வெளியே உள்ள இதர மாநிலங்களில் இருந்து பட்டாசு வாங்கி வெடிக்கிறார்கள் என்ற முரண்பட்ட கருத்துகள் வெளிவர வாய்ப்பு இல்லாமல் போகும். உழைக்கும் மக்களின் கூடுகை கொண்டாட்டம் மகிழ்ச்சி தொடர துணிமணிகள், இனிப்புகள், சிறப்பு உணவுகள் என்று உண்டு மகிழ, குறைந்தபட்ச நிதி வசதி தேவைப்படும்.
இதற்கெல்லாம் பரிகாரமாக இருந்து சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் சிறு கடன் வசதிகள் ஆகியவற்றை நுண் கடன் என்ற பெயரில் கந்து வட்டிக்காரர்கள் கபளீகரம் செய்து கொண்டனர்.
வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற நிறுவனங்கள் சார்ந்த கடன் வசதிகள் தாண்டி இதற்கு வேறு மாற்று இல்லை. அதனை சுய உதவிக் குழுக்கள் வழியாக மீண்டும் செயலாக்கம் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.
4,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிலிப்ஸ்!
சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!