பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு 30 லட்சம் ரூபாய் விமான போக்குவரத்து இயக்குநரகம் அபராதம் விதித்துள்ளது
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது பிசினஸ் கிளாஸில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயதான பெண் மீது போதையில் இருந்த மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் அவரது இருக்கை அருகே சென்று சிறுநீர் கழித்துள்ளார்.
ஆனால் இது தொடர்பாக சங்கர் மிஸ்ரா மீது ஏர் இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் டாடா குழுமத் தலைவருக்கு கடிதம் மூலம் தனது புகாரை அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
இது தொடர்ந்து சங்கர் மிஷ்ரா மீது ஏர் இந்தியா நிறுவனம் புகார் அளித்தது. சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அவர் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் பிரச்சனையை முறையாகக் கையாளவில்லை என்று 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது விமான போக்குவரத்து இயக்குநரகம்.
அதுமட்டுமின்றி, விமான விதிகள், 1937 இன் விதி 141 மற்றும் விமான போக்குவரத்துக் கழக தேவைகளின்படி, விமானத்தை இயக்கிய விமானியின் ஓட்டுநர் உரிமம் 3 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பணிகளைச் செய்யத் தவறியதாக ஏர் இந்தியா விமானச் சேவை இயக்குநருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்!
பாஜக செயற்குழு கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!