நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம், மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி வசூலானது தொடர்ந்து அதிகரித்து வருவதை சொல்லலாம்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மொத்த வரி வசூலானது 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்த நிதியாண்டில் இதுவரை (ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை) வசூலான மொத்த நேரடி வரி (Gross Direct Tax Collection) 9.84 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட 18.29 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த 9.84 லட்சம் கோடி ரூபாயில், 4.71 லட்சம் கோடி ரூபாயானது தொழில் நிறுவனங்கள் கட்டிய கார்ப்பரேஷன் டேக்ஸ் மூலம் கிடைத்ததாகும்.
மீதமுள்ள 5.13 லட்சம் கோடி ரூபாயானது தனிநபர் வருமான வரியாக கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு தொழில் நிறுவனங்கள் மூலம் 9 லட்சம் கோடி ரூபாயையும், தனிநபர் வருமான வரி மூலம் 9 லட்சம் கோடி ரூபாயையும் வரியாக ஈட்ட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த நிதியாண்டின் முதல் ஐந்தரை மாதங்களில் தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.4.71 லட்சம் கோடி வரியும், தனிநபர் வருமான வரியாக 5.13 லட்சம் கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
இனி மீதமுள்ள 8.16 லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெறுவதில் பெரிய பிரச்சினை எதுவும் இருக்கிறது என்று ஒன்றிய அரசு கருதுகிறது.
இதுவரை 1.21 லட்சம் கோடி ரூபாய் வரியானது மக்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த வரி வசூலான 9.84 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 1.21 லட்சம் கோடி ரூபாயைக் கழித்தால் நிகர வரி 8.63 லட்சம் கோடியாக இருக்கிறது.
“இனிவரும் நாள்களில் தீபாவளி உட்பட பல பண்டிகைகள் வருவதால், மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி இன்னும் அதிகரிக்கவே செய்யும்; 18 லட்சம் கோடியை எட்டும் என்கிறார்கள்” பொருளாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள்.
ராஜ்
யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் வனத்துறை சுற்றுலாத் தலங்கள் மூடல்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!