உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் திலீப் சைனி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் சதர் கோட்வாலியின் பிடௌரா பைபாஸ் அருகே தனியார் யார்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு ஏ.என்.ஐ நிறுவன பத்திரிகையாளரான திலீப் சைனியும், பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஹித் கானும் உணவருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் திலீப் சைனியை சரமாரியாக குத்திவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனை தடுக்க வந்த ஷாஹித் கானும் பயங்கரமாக தாக்கப்பட்டார்.
இருவரும் ஃபதேபூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேற்சிகிச்சைக்காக கான்பூர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திலீப் சைனி உயிரிழந்தார். அதனை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.
அதேவேளையில் ஷாஹித் கான் தற்போது கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக உயிரிழந்த திலீப் சைனியின் மனைவி அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஷாஹித் கான் அளித்த வாக்குமூலத்தில், “அன்று இரவு நாங்கள் சைனியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பின்னர் திடீரென உள்ளே வந்த மர்ம நபர்கள் திலீப்பைக் குத்தத் தொடங்கினர். நான் தடுக்க முயன்றபோது என்னையும் அவர்கள் கத்தியால் குத்தினார்கள். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சைனியை கொலை செய்த நபர்கள், அவருக்குத் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு எனவும், அவர்களுக்கும் திலீப் சைனிக்குக் இடையே சொத்து விஷயமாக தகராறு ஏற்பட்டிருக்கலாம், அதனால் சைனி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு எனவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
காதலனுக்காக எஸ்.ஐ வேடம் போட்ட பெண்: கைது செய்த போலீஸ்!
தமிழ்நாடு நாள்: இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் – ராமதாஸ்
மத்திய அரசின் விருது பெறும் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் யார், யார்?