அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பந்த்வந்த் பன்னும் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீடா உள்ளிட்ட ஏராளமான உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், டிரம்பின் பதவியேற்பு விழாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பந்த்வந்த் சிங் பன்னும் பங்கேற்றிருப்பது போலவும், பதவியேற்பு விழாவின் போதே ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று அவர் கோஷமிடுவது போன்றும் அந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியுள்ளது.
பதவியேற்பு விழாவின் போது மேடையில் டிரம்பும் அவரின் மனைவி மெலனியாவும் ஏறி வந்த போது, அனைவரும் யு.எஸ்.ஏ, யு.எஸ்.ஏ என்று கோஷமிடுகையில் குர்வந்த்பந்த் சிங் இந்தியாவுக்கு எதிரான கோஷத்தை எழுப்பியுள்ளார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.
கனடாவில் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பினை குர்பந்த்வந்த் சிங் பன்னும் நடத்தி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் தீவிரவாதி என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டார்.
பன்னும் மீது இந்தியாவின் என்.ஐ.ஏ. வழக்கும் பதிவு செய்துள்ளது. கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் அவர் இருப்பதாக நம்பப்படுகிறது. பஞ்சாப் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் அவர் நடத்திய தீவிரவாத செயல்கள் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.