150 மாவட்ட ஆட்சியர்களிடம் தேர்தல் தொடர்பாக அமித்ஷா பேசியிருப்பதாக ஜெய்ராம் ராமேஷ் கூறிய குற்றசாட்டுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
இதற்கிடையே கடந்த ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள்/ தேர்தல் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இதுவரை 150 பேரிடம் பேசியுள்ளார். இது வெட்கக்கேடான மற்றும் அப்பட்டமான மிரட்டல். பாஜக எவ்வளவு அவநம்பிக்கையில் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஜூன் 4 ஆம் தேதி மக்களின் விருப்பமே மேலோங்கும்” என்று அமித்ஷா, மோடி ஆகியோரது பெயரை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஜெய்ராம் ரமேஷ்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு ஜெய்ராம் ரமேஷிடம் தேர்தல் ஆணையம் கோரியது.
இந்நிலையில் இன்று (ஜூன் 3)ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “யாராலாவது அவர்கள் (மாவட்ட ஆட்சியர்கள்) அனைவரது மீதும் செல்வாக்கு செலுத்த முடியுமா? ஒருவரால் 500-600 பேரை கட்டுப்படுத்த முடியுமா?
அப்படி செய்தவர் யார் என்று சொல்லுங்கள்… அவரை நாங்கள் தண்டிக்கிறோம். இதுதொடர்பான விவரத்தை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
வதந்திகளை பரப்பி அனைவரையும் சந்தேகிப்பது சரியல்ல” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டம் : ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கலைஞர்: மோடி புகழாரம்!