ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சூதாட்டம் குறித்து ஐபிஎஸ் அதிகாரியான சம்பத்குமார் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளதால்,
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்திடம் டோனி தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து, தலைமை வழக்கறிஞர் அனுமதி வழங்கிய நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக டோனி சார்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ,நீதிபதி டீக்காராமன், அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஜெ.பிரகாஷ்
குழம்பிய குட்டையாகும் ஆவின்: மீன்பிடிக்கும் அண்ணாமலை
இனி வருடம் முழுதும் குற்றால அருவி கொட்டும்: இதோ புதிய திட்டம்!