எம்.பி.யிடம் கரன்சி குவியல்: இறங்கியடிக்கும் மோடி-அமித் ஷா… திணறும் காங்கிரஸ்

இந்தியா

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி தீரஜ் பிரசாத் சாஹுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க பணத்தின் எண்ணிக்கை ரூபாய் 353 கோடியை தொட்டுள்ளது.

புகழ்பெற்ற பால்டியோ சாஹூ குழுமத்துக்கு சொந்தமான பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை மேற்கு ஒடிசாவில் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலைகளில் ஒன்றான பவுத் டிஸ்டிலெரி சார்பில் ஒடிசாவில் மட்டுமே 250 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் இந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

இதையடுத்து சம்பல்பூர், போலங்கிர், திதிலாகர், பௌத், சுந்தர்கர், ரூர்கேலா, புவனேஸ்வர் போன்ற இடங்களில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 6) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த மதுபான நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கும் (64) தொடர்புண்டு என்பதால் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் தீரஜ்க்கு சொந்தமான போலங்கிர் மாவட்டம் சுடாபாடா பகுதியில் உள்ள மறைவிடத்தில் இருந்து, 176 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரொக்க பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆறு நாட்களாக இந்த பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்காக சுமார் 40 பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டன. இந்த நிலையில் தீரஜ் சாஹுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க பணத்தின் எண்ணிக்கை ரூபாய் 353 கோடியை தொட்டுள்ளது.

அதோடு சுமார் 150 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.வருமான வரித்துறை சோதனையில் சுமார் 353 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஒரே கட்டத்தில் கைப்பற்றப்படுவது இந்தியளவில் இதுவே முதன்முறையாகும்.

கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒடிசாவின் போலாங்கிரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் டெபாசிட் செய்துள்ளனர். தற்போது தீரஜ் சாஹுவிடம் கைப்பற்றிய பணம் தொடர்பான ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் தீரஜ் சாஹுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என பாஜகவினர் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.

 

பிரதமர் மோடி

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” இந்த நோட்டு குவியலை பார்த்து விட்டு மக்கள் அவர்களுடைய நேர்மையான பேச்சை கேட்க வேண்டும். பொது மக்களிடம் எது கொள்ளை அடிக்கப்பட்டதோ, அதன் ஒவ்வொரு பைசாவும் மக்களிடம் திருப்பி அளிக்கப்படும். இது மோடி அளிக்கும் உறுதிமொழி,” என தெரிவித்துள்ளார்.

ஜெ.பி.நட்டா

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தளத்தில், ”நீங்களும், உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. அரச குடும்பம் என்ற பெயரில் இங்கே பொதுமக்களை சுரண்ட முடியாது.

நீங்கள் ஓடி சோர்வடைந்து விடுவீர்கள். ஆனாலும் சட்டம் தனது கடமையை செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்ப பெறப்படும்” என தெரிவித்து இருக்கிறார்.

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அமித்ஷா, ” எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்துக்கு பிறகு எம்.பி. ஒருவரின் வீட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் இந்த ஊழலை பற்றி கருத்து எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றன. காங்கிரஸின் இயல்பிலேயே ஊழல் இருப்பதால் ஜேடியு, ஆர்ஜேடி, திமுக, எஸ்பி என அனைத்து கட்சியினரும் அமைதியாக இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தங்கள் ஊழல் ரகசியங்கள் அனைத்தும் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அமித் மாளவியா

பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா தன்னுடைய சமூக வலைதளத்தில், ”தீரஜ் சாஹுவை காங்கிரஸ் கட்சி 3 முறை எம்பியாக்கி உள்ளது. சுதந்தர போராட்ட காலம் முதல் தங்களது குடும்பம் காங்கிரஸில் இருப்பதாக சாகு கூறியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து காங்கிரஸ் தற்போது விலகி நிற்கிறது. அவர் எந்த காந்தியின் ஏடிஎம் மையமாக செயல்பட்டார் என்ற உண்மையை காங்கிரஸ் சொல்ல வேண்டும்” என தெரிவித்து இருக்கிறார்.

சித்தராமையா

பாஜகவினரின் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா, ” இந்த விவகாரத்தில் கட்சி சார்பாக எதுவும் கூற முடியாது. இது அந்த எம்.பி-யின் தனிப்பட்ட வணிகம் தொடர்பான பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைவர்களை மட்டும் மத்திய அரசு குறி வைக்கிறது. பாஜக தலைவர்களிடம் சோதனை நடத்தப்படாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

இதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ” எம்.பி தீரஜ் சாஹுவின் வணிகங்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தொடர்புமில்லை. இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்பதை அவர் தான் விளக்க முடியும். இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்,” என தெரிவித்து இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

176 மூட்டைகள்… 300 கோடிக்கு மேல்… பணத்தை எண்ணி பழுதான மெஷின்கள்! கரன்சி குவித்த காங்கிரஸ் எம்.பி. யார் இந்த தீரஜ் சாஹு?

மத்திய பிரதேசத்தின் முதல்வராக முன்னாள் அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0