‘சமூகம் பெரிய இடமோ’ என்ற வசனம் நேற்று இன்று நாளை திரைப்படத்தில் இடம்பெறும். இந்த வசனம் தற்போது கேரள சேட்டனுக்கு நிச்சயம் பொருந்தும்.
கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் தீரஜ் பல்லியில். 28 வயதான இவர் டேர் பிக்சர் டிஜிட்டல் கன்சல்டன்சி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
மலையாள திரையுலகில் கேமிரா ஆப்ரேட்டராகவும் உள்ள தீரஜ், திரிஷ்யம் 2, லூசிபர், பீஷ்மா பர்வம் போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் ரசிகர்!
தீரஜ்க்கு ஆப்பிள் ரக போன்கள் என்றால் கொள்ளை பிரியம்.
ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்சின் ரசிகராக தன்னை குறிப்பிடும் தீர்ஜ், அந்நிறுவனத்தின் சாதனங்கள் ஏதேனும் விற்பனைக்கு வந்தால் அதனை வாங்குவது மட்டும் தீரஜ்ஜின் விருப்பம் இல்லை.
முதல் ஆளாக வாங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஐபோன் 14 ரக போன்களை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் கடந்த 7ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் ஐபோன் விற்பனை தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 17ம் தேதி முதல் ஐபோன் 14 சீரிஸ் விற்பனைக்கு வந்தது.
இதனையடுத்து ஐபோன் பிரியர்கள் இப்போது அதனை வாங்கி தங்களது சமூகவலைதள பக்கங்களில் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
துபாய்க்கு பறந்த சேட்டன்!
இதற்கிடையே, ஆப்பிள் ரக போனின் மிக தீவிர பிரியரான தீரஜ் பல்லியில் கொச்சியிலிருந்து கடந்த 15ம் தேதி துபாய்க்கு சென்றுள்ளார்.
அதற்கு மறுநாள் (செப்டம்பர் 16) துபாயில் உள்ள மிர்டிஃப் சிட்டி சென்டரில் அதிகாலை முதல் காத்திருந்து காலை 7 மணியளவில் ஐபோன் 14 ப்ரோ ரக போனை வாங்கியுள்ளார்.
இந்தியாவில் இந்த போன் விற்பனைக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாக துபாயில் அதனை வாங்கிய தீரஜ், ஐபோன் 14 சீரிஸ் போனை பயன்படுத்தும் முதல் இந்தியர் என்ற பெயர் பெற்றுள்ளார்.
512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 14 ப்ரோ போனை தீரஜ் வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.1,29,000 ஆகும். அது தவிர விமான டிக்கெட் மற்றும் விசா போன்றவற்றுக்காக சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

தீர்ஜ் இவ்வாறு செய்வது இது முதல்முறை அல்ல என்று தெரியவந்துள்ளது. முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு ஐபோன் 8 போனை இந்தியாவில் இருந்து முதல் ஆளாக வாங்குவதற்கு துபாய்க்கு சென்றுள்ளார்.
அதன் பிறகு ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல் வாங்குவதற்கும் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது 5வது முறையாக துபாய் சென்று புதிய ஆப்பிள் ரகத்தின் முதல் இந்திய பயனர் என்ற பெயரினை பெற்றுள்ளார்.
இதுகுறித்து தீரஜ் இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அவர் குறித்த செய்தி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆர்டர் செய்த சில நிமிடங்களில் கையில் ஐபோன்