தசரா யானையைக் கொன்ற காட்டு யானை!
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற 58 வயதாகும் கோபாலசாமி யானையும் இந்த முகாமில் தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குப் பராமரிக்கப்பட்டு வரும் யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் சிறிதுநேரம் விடப்பட்டு மீண்டும் முகாமிற்குள் அழைத்து வரப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.
முகாமில் இருந்து வனப்பகுதிக்குள் விடப்படும் யானைகளுக்கும் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகளுக்கும் அவ்வப்போது சண்டையும் ஏற்படும்.
இந்த நிலையில் தான் முகாமில் உள்ள யானைகள் செவ்வாய் கிழமை அன்று(நவம்பர் 22) வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டன.
அந்த சமயத்தில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானைக்கும் கோபாலசாமி யானைக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட வனப்பகுதி பணியாளர்கள் இரண்டு யானைகளையும் பிரித்து விட முயன்றுள்ளனர். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சண்டையில் கோபாலசாமி யானைக்குப் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று யானைக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கோபாலசாமி யானை நேற்று(நவம்பர் 23) மாலை உயிரிழந்தது. உயிரிழந்த கோபாலசாமி யானையை முகாம் பகுதியில் வனத்துறையினர் குழிதோண்டி அடக்கம் செய்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
2009ஆம் ஆண்டு சகலேஷ்பூரில் உள்ள எட்டூரில் இருந்து கோபாலசாமி பயிற்சி முகாமிற்கு அழைத்து வரப்பட்டது.
2.85மீ உயரம் கொண்ட மிகவும் கம்பீரமான யானைகளில் ஒன்றாக கோபாலசாமி இருந்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் மைசூர் தசராவில் வழக்கமாக கோபாலசாமி யானை பங்கேற்று வருகிறது.
2022தசராவில் தங்க அம்பாரியைச் சுமந்த அபிமன்யு யானைக்கு மாற்று யானையாக கோபாலசாமிக்கும் அம்பாரியைச் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஜல்லிக்கட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
“ஆடியோவை மறந்துடுங்க… நாங்க அக்கா – தம்பி” : டெய்சி – சூர்யா