சன்யாசியாக விரும்பியவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!

இந்தியா

ஒரு காலத்தில் சன்யாசியாக போக விரும்பிய மாணவர் ஒருவர் தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு முடிவை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரேவை சேர்ந்த தனுஷ் குமார் தேர்வாகியுள்ளார். இவரது தந்தை நீண்ட காலத்திற்கு முன்பே குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.
தனுஷ் குமார் 5ஆம் வகுப்பு வரை அரசிகெரேவில் படித்த நிலையில், பின்னர் அங்கிருந்து பெங்களூருவுக்கு அம்மா சேதனா கவுடாவும் குடிபெயர்ந்தார். தனுஷின் அம்மா லோன் ஏஜெண்ட்டாக வேலை செய்து தனது மகனை படிக்க வைத்தார்.
கணினி அறிவியலில் பிஇ பட்டம் பயின்றார் தனுஷ். ஆனால் கல்வியை முடித்ததும் அவருக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகள் தியானம் உள்ளிட்ட ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டார்.

அப்போது அவரது தாய் சேதனா, “நீ ஒரு பொறுப்பான குடிமகனாக இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இதையடுத்துதான் யுபிஎஸ்சி தேர்வை விடா முயற்சியுடன் எழுதி வந்த தனுஷ் 2022ஆம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 501ஆவது ரேங்க்கை பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து தனுஷ் குமார் கூறுகையில், “நான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அம்மாதான் காரணம். நான் சன்யாசியாக போக விரும்பினேன். சுமார் ஆறு ஆண்டுகளாக எனது பெரும்பாலான நேரத்தை தியானத்தில் தான் செலவிட்டேன். இதற்கும் அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார். நீ ஒரு பொறுப்பான குடிமகனாக மாற வேண்டும் என்று கூறினார். நீண்ட கால தியானத்திற்கு பிறகு சமுதாயத்திற்காக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்படி சமுதாயத்துக்குச் சேவை செய்ய வேண்டுமெனில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதே சிறந்த வழி என்று முடிவெடுத்தேன்.
இதுவரை 4 முறை தேர்வு எழுதியிருக்கிறேன். இதில் 3 முறை நேர்காணல் வரை சென்று இறுதி பட்டியலில் தேர்வாகவில்லை. இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதையே விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்தேன். தற்போது ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். ஐபிஎஸ் கேடரில் தேர்வாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பிரியா

எலிமினேட்டர் சுற்றில் மும்பை-லக்னோ: வெளியேறப்போவது யார்?

விருது வாங்கிய கையுடன் ரசிகர்களை கிண்டலடித்த ஜடேஜா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *