செல்லில் மற்ற கைதிகள்: ஒரு டி.ஜி.பியும் ஷெரினும் … அந்தரங்க அறையான சிறை!

Published On:

| By Kumaresan M

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர்  அருகேயுள்ள செரியநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் கன்னவார். இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை செய்யப்பட்ட சமயத்தில் பாஸ்கரின் மாற்றுத்திறனாளி மகன் பீட்டர் அவரின் மனைவி ஷெரின் மற்றும் குழந்தை ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

பாஸ்கர் ஒரு அறையிலும் மற்றவர்கள் வேறு அறையிலும் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். பாஸ்கர் கொல்லப்பட்டது மற்ற அறையில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. அடுத்த நாள் காலை வீட்டுக்கு பணிப்பெண் வந்துள்ளார். அவர்தான், பாஸ்கர் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு மற்றவர்களிடத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கொலை செய்ததாக சொல்லப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்திய போது, பாஸ்கரின் மருமகள் நடத்தையில் பதற்றம் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, ஷெரின் செல்போனை ஆய்வு செய்த போது, பாஷித் அலி என்பவருடன் நவம்பர் 9 ஆம் தேதி மட்டும் 54 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் மாமனார் பாஸ்கரை ஷெரின் தனது ஆண் நண்பர் பாஷித் அலி மற்றும் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தது.

அதாவது, பாஸ்கரை கொலை செய்ய பாஷித் அலி தனது சகாக்களுடன் வந்த போது, வீட்டின் கதவை ஷெரினே திறந்து விட்டுள்ளார்.

முன்னதாக, வீட்டில் வளர்க்கப்பட்ட இரு நாய்களையும் தனியாக வேறு ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளார். இதனால், எந்த தடங்கல்களும் இல்லாமல் பாஷித் அலியும் அவரது சகாக்களும் வீட்டுக்குள் நுழைந்து பாஸ்கரை கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.

இந்த சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள், பாஸ்கரை கொலை செய்வது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காக வீட்டை சுற்றிலும் மிளகாய் பொடியையும் ஷெரின் தூவியுள்ளார்.

எனினும், போலீசார் ஷெரினை எளிதாக பிடித்து விட்டனர். தொடர்ந்து, பாஷித் அலியும் அவரின் இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஷெரின் பீட்டரை திருமணம் செய்வதற்கு முன் பல ஆண்களை காதலித்து பணத்தை கறந்திருப்பதும் தெரிய வந்தது.

கடைசியாக பாஷித் அலியுடன் ஷெரின் தொடர்பில் இருந்துள்ளார். ஷெரினின் தகாத உறவுக்கு பாஸ்கர் தடையாக இருந்ததால் அவரை கொன்றுவிட்டு சொத்துக்களை அபகரிக்க ஷெரின் , பாஷித் அலி ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு மவேலிக்கரா நீதிமன்றம் தீரப்பளித்தது.

கொலைக்கு மூளையாக இருந்த ஷெரினுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது, விஷயம் இதுவல்ல… நன்னடத்தை காரணமாக திடீரென்று ஷெரினுக்கு விடுதலை அளித்திருப்பதுதான் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சிறைக்கு சென்ற பிறகும் ஷெரின் திருந்தவில்லை. சிறைக்குள் இருந்து கொண்டே போலீஸ் அதிகாரிகளை கவர தொடங்கினார். பல அதிகாரிகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், சிறையிலும் ராஜ வாழ்க்கை வாழ தொடங்கினார். சிறையில் இருந்தபடியே அமைச்சர்கள் வரை ஷெரினுக்கு தொடர்பு நீண்டிருந்துள்ளது.

பொதுவாக, கைதிகளின் நன்னடத்தை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க தனி குழு உள்ளது. இந்த குழுவில் சிறைத்துறை டி.ஜி.பி. மற்றும் கேரள பெண்கள் கமிஷன் தலைவர் உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு யாரை விடுதலை செய்யலாம்? என்று முடிவு செய்யும்.

அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் ஷெரினை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுதான் இப்போது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்காமல், ஷெரினை விடுவித்ததுதான் பல கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.

தற்போது , கண்ணூர் சிறையில் இருக்கும் ஷெரின் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி 14 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்தார்.

இவர், ஆரம்பத்தில் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் நெய்யாற்றின்காரா பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். மொபைல் போன் பயன்படுத்தியதற்காக அங்கிருந்து 2015 ஆம் ஆண்டு விய்யூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். விய்யூரில் சிறையில் மருத்துவர் ஒருவரை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அவருடன் இருந்த உறவு காரணமாக 2017 ஆம் ஆண்டு ஷெரின் திருவனந்தபுரத்தில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் கடைசி 2 ஆண்டுகள் கண்ணுர் சிறையில் இருந்தார்.

தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நன்னடத்தையின் அடிப்படையில் தன்னை விடுவிக்கக் கோரி விண்ணப்பித்தார். இது போன்ற விண்ணப்பங்கள் பல காலம் கிடப்பில் கிடக்கும். ஆனால், ஷெரின் அனுப்பிய விண்ணப்பம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, விடுதலை செய்யவும் அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. பரிந்துரைத்த குழு ஷெரின் பற்றிய பல விஷயங்களை அரசுக்கு மறைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஒழுங்கீனம் காரணமாக இவர் பல சிறைகளுக்கு மாறியதும் மறைக்கப்பட்டுள்ளது. சிறை மாற்றம் செய்யப்படும் போது, போலீஸ் வேனில் செல்லாமல் ஸ்கார்பியோ காரில் ஷெரினை அழைத்து சென்றுள்ளனர். சிறைத்துறை, நீதித்துறை அமைப்புகளின் அறிக்கையும் ஷெரினுக்கு சாதகமாக வழங்கப்பட்டது. முக்கியமாக சிறை கண்காணிப்பாளரிடம் இருந்து நன்னடத்தை சான்றிதழும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷெரின் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பரோல் பெற தொடங்கினார். கிட்டத்தட்ட 452 நாட்கள் அவர் பரோலில் இருந்துள்ளார். 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சிறையில் ஷெரினுடன் இருந்த சுனிதா பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஷெரினின் உல்லாச வாழ்க்கை பற்றி சுனிதா கூறியதாவது, “2013 ஆம் ஆண்டு ஆத்துக்குளங்காரா சிறையில் அவருடன் இருந்தேன். ஷெரினுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. அவருக்கு மொபைல் போன் கொடுக்கப்பட்டது.

முகம் பார்க்கும் கண்ணாடி, மேக்கப் செட்டும் வைத்திருந்தார். சிறையில் அணிய அவருக்கு தனியாக சுடிதார் செட்டுகள் வழங்கப்பட்டன. சிறையில் அவர் யூனிபார்ம் அணி மாட்டார். வெளி உலகில் இருப்பதை போலவே சுடிதார் அணிந்து வலம் வருவார். சிறை உணவு சாப்பிட மாட்டார். மூன்று வேளையும் அவருக்கு வெளியே இருந்து உணவு வாங்கி தர ஆள் இருப்பார்கள்.

சிறைத்துறை டி.ஜி.பி பிரதீப் ஷெரினுடன் நெருங்கி பழகினார். வாரத்துக்கு ஒரு முறை ஆத்தாக்குளங்கரா சிறைக்கு பிரதீப் வருவார். இரவு 7 மணிக்கு மேல் அனைத்து கைதிகளும் செல்லுக்குள் அடைக்கப்பட்ட பிறகு, ஷெரின் மட்டும் வெளியே அனுப்பப்படுவார். பின்னர் 2 மணி நேரம் கழித்துதான் செல்லுக்கு திரும்புவார். இரு அமைச்சர்களுடனும் அவர் தொடர்பில் இருக்கிறார்.

கண் தெரியாத பெண் கைதிகள் கூட 20 ஆண்டு காலம் சிறையில் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் விடுவிக்க அரசு முடிவு செய்யவில்லை. ஆனால், கொலையும் செய்து விட்டு சிறையில் பல அதிகாரிகளுடன் லீலையில் ஈடுபடும் ஒருவரை விடுவிப்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஷெரினை விடுவிப்பது போல மற்றவர்களையும் விடுவிப்பது குறித்து யோசிக்க வேண்டுமல்லவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் என்பதால் ஷெரினை விடுவிக்க முன்னுரிமை கொடுத்துள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஒரு பெண் அழகாக இருந்தால் எவ்வளவு அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள், அதிகாரிகள் எப்படி காலில் கிடக்கிறார்கள் என்பதற்கு ஷெரின் போன்றவர்களே சிறந்த உதாரணம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share