விமானப் போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் சம வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ள பாலின சமத்துவக் கொள்கையை குறிப்பாகக் கொண்டு, ‘சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவம்’ டிஜிசிஏவின் புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பெண்களுக்கான பணி வாய்ப்பு அதிரடியாக உயர உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையில் 2025-ம் ஆண்டுக்குள் பெண்களின் விரும்பத்தக்க பிரதிநிதித்துவம் 25 சதவிகிதம் உயரும் எனவும், பல்வேறு பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை டிஜிசிஏ நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள், தரையிலும், ஆகாயத்திலுமாக பெண்களுக்கான பணி வாய்ப்புகள் உயர இருக்கின்றன.
விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பல்வேறு காலிப் பணியிடங்களை வெளியிட வேண்டும் என்றும் அதற்கு பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வெளிப்படையாக ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக பெண்கள் பாதுகாப்புக்கு என, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த இலக்கை அடைய உரிய மனிதவள கொள்கைகளை உருவாக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்களின் பணி விவரங்களைப் பன்முகப்படுத்தவும், பெண்களின் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும், பாலின சமத்துவ பணி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற எளிய வழிமுறைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி பெண்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப சூழல்களுக்கு ஏற்ப தளர்வுகளை அமல்படுத்தவும் உத்தரவாகி உள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இயக்குநர் பெயர் இல்லாமல் வெளியான ஆர்.ஜே.பாலாஜி புதுப்பட அறிவிப்பு!
டெல்லியில் தொடரும் வெப்ப அலை: ஒரே நாளில் 17 பேர் பலி!
டாப் 10 நியூஸ் : கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை முதல் காங்கிரஸ் போராட்டம் வரை!