வீல்சேர் வழங்காததால் உயிரிழந்த முதியவர் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

Published On:

| By christopher

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நடந்து சென்ற 80 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சகம்,  ஏர் இந்தியா நிறுவனத்துக்கு  ரூ.30 லட்சம் அபராதம்  விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பாபு படேல் (80) என்ற முதியவர், தனது மனைவி நர்மதா பென்னுடன் (76) மும்பை வந்தார். அவர் விமான டிக்கெட் எடுக்கும்போதே இரண்டு வீல்சேருக்கும் முன்பதிவு செய்து இருந்தார்.

ஆனால், மும்பை வந்தவுடன் வீல்சேர் பற்றாக்குறை காரணமாக அவருக்கு வீல்சேர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மனைவியை மட்டும் வீல்சேரில் செல்லுமாறு கூறிவிட்டு, பாபு படேல் நடந்தே சென்றார். இமிகிரேஷன் கவுன்டர் பகுதி வரை அவர் நடந்து வந்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வீல்சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் ஏர் இந்தியா அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்று கூறியுள்ள விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்