மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக்கோரி 7வது நாளான இன்றும் (ஜூலை 28) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து முதல் நாள் முதல் ஆறாம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர்ந்து வரும் கலவரம் குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் அதுகுறித்து விவாதிக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 7 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விளக்கம் அளிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
இதனால் நண்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மக்களவை தொடங்கியபோதும், எதிர்க்கட்சியின் பதாகைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியதால், அவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மேஜையைத் தட்டிப் பேசினார்.
இதனால் அவருக்கும், சபாநாயகரான ஜக்தீப் தன்கருக்கும் இடையே ஆக்ரோசமாக வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து வரும் திங்கள்கிழமை (ஜூலை 31) அன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவையைச் சுமூகமாக நடத்த ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவைக்குள் பிரதமர் பேசக் கோரி எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா நோட்டீஸ் ஏற்கப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதத்திற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே இரவில் கோடீஸ்வரர்களான கேரளாவின் 11 தூய்மை பணியாளர்கள்!
என்.எல்.சி.க்கு எதிராக பாமக போராட்டம் : அன்புமணி கைது!