ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர், மற்றும் வீராங்கனைகளுக்குச் சீனா மறுப்புத் தெரிவித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து அதிக ராணுவ பலத்தைக் கொண்ட நாடு சீனா. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
இந்திய -சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசம் தங்களுடையது என்று சீனா கூறி வருகிறது. அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் உள்ளே நுழையவும் முயன்று வருகிறது.
அண்மையில் சீனா வெளியிட்டிருந்த வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவுடையது என்பது போல் இணைத்திருந்தது.
இந்தச்சூழலில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்திலிருந்து கலந்துகொள்ள இருந்த மூன்று வீரர்களுக்குச் சீனா அனுமதி மறுத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்குகிறது.
இதில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்கள் நெய்மன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர். ஆனால் இவர்கள் மூன்று பேருக்கும் விசா வழங்க சீனா மறுத்துவிட்டது.
இவர்களைத் தவிர 7 வீரர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த மூன்று பேரும் ஜேஎல்என் ஸ்டேடியத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மத்திய அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது,
“குடியுரிமை அல்லது இனத்தின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களை வேறுபட்ட முறையில் நடத்துவதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது.
நமது விளையாட்டு வீரர்கள் சிலருக்கு சீனா வேண்டுமென்றே தடை விதித்துள்ளது. சீனாவின் நடவடிக்கை ஆசிய விளையாட்டுகளின் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது.
இந்த விளையாட்டு விதிகள் உறுப்பு நாடுகளின் போட்டியாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்கிறது.
சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாக, இந்தியத் தகவல், ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், விளையாட்டுப் போட்டிகளுக்காகச் சீனாவுக்குச் செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
பிரியா
துக்க நிகழ்ச்சிகளில் வரம்பு மீறும் ஊடகங்கள்: நடிகர் சங்கம் கண்டனம்!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!