கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் திருநங்கை ஜோடி திருமணம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஆலப்புழாவைச் சேர்ந்த நீலன் கிருஷ்ணா பெண்ணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆத்மிகா ஆணாக பிறந்து விருப்பத்தின்பேரில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்.
இவர்கள் 2 பேரும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 24) பாலக்காடு கொல்லங்கோடு நகரில் உள்ள காலாங்குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதியும் பெற்று இருந்தனர்.
ஆனால் திடீரென நேற்று முன்தினம் அனுமதி இ்ல்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்த அவர்கள், தங்களது நண்பர்கள் உதவியுடன் கொல்லங்கோடு பொள்ளாச்சி ரோட்டில் உள்ள செங்குந்தர் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தனர்.
தொடர்ந்து அந்த மண்டபத்தில் அவர்களுக்கு நண்பர்கள் மற்றும் இருவீட்டாரின் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. கடைசி நேரத்தில் கோவிலில் திருமணம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இதுகுறித்து பேசிய கோவில் நிர்வாகி ஒருவர் ” திருநங்கை ஜோடிகளுக்கான திருமணங்கள் இதுவரை இந்த கோவிலில் நடைபெற்றதில்லை என்றும் காதல் ஜோடிகள் அவர்கள் பெற்றோர்களிடம் முறையான அனுமதி பெற்றனரா என்பது பற்றி தெரியாததால் இந்த திருமணம் இங்கு நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்