பண மதிப்பழிப்பு தொடர்பான விசாரணை நேற்று (நவம்பர் 25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
பிரதமர் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கள்ள நோட்டு, கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் பொருளாதார கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்ற நீதிபதிகள் இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு மாற்றினர்.

அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராம சுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மக்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்து பேசும்போது, “மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தது தவறான நடவடிக்கை.
கடந்த 20 ஆண்டுகளில் அனைத்து குடிமக்களின் வாழ்க்கையையும் பாதித்த ஒரு பெரிய பொருளாதார முடிவு என்றால், அது பண மதிப்பழிப்பு நடவடிக்கை தான்.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்க பண மதிப்பழிப்பு நடவடிக்கையைத் தவிர மத்திய அரசு மாற்று முறைகளை ஆய்வு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பண மதிப்பழிப்பு நடவடிக்கை என்பது 26 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பழிப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு எழுதிய கடிதம் நவம்பர் 7-ஆம் தேதி பிற்பகல் சென்றடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தவுடன் நவம்பர் 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கேபினட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பண மதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்தார். இது மிகவும் மூர்க்கத்தனமான செயல்முறையாகும். சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது” என்று வாதிட்டார்
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதாடுகையில், “உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் நிர்வாக முடிவை மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். பண மதிப்பழிப்பு நடவடிக்கை முடிந்துவிட்டது. பணி மதிப்பு நீக்கம் என்பது ஒரு தனி பொருளாதார கொள்கை அல்ல. இது ஒரு சிக்கலான பணவியல் கொள்கை.” என்றார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் பண மதிப்பழிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் நிபுணர்கள் கூறிய பொருளாதார சிக்கல்கள். எதிர் தரப்பினர் பண மதிப்பழிப்பை செயல்படுத்தும் விதம் தவறானது என்ற வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?. பண மதிப்பழிப்பு நடவடிக்கை ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26 (2) மீறியுள்ளது என்று கூறுகிறார்கள்.

பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலம் நிர்ணயிக்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறி விட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? பண மதிப்பழிப்பை செயல்படுத்திய விதம் தவறானது என்ற வாதங்களுக்கு நீங்கள் தீர்வு கூற வேண்டும். நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த வெங்கடரமணி, “பொருளாதார மற்றும் சமூக நல கண்ணோட்டத்தில் பார்த்தால் பண மதிப்பழிப்பு நடவடிக்கை தோல்வி அடைந்தது என்று கூற முடியாது. இந்த நடவடிக்கையால் கணிசமான அளவு கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக நிவாரணம் எதுவும் வழங்க முடியாது.” என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பாஜக கிளப்பிய பாகிஸ்தான் ஜிந்தாபாத்: பதிலடி கொடுத்த காங்கிரஸ்