டெல்லி பெண் கொலை: விசாரணையில் நண்பர்கள் புதிய தகவல்!
டெல்லியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தா வால்கர், இதற்குமுன் காதலனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலன் அஃப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, ஃபிரீசரில் வைத்து வெவ்வேறு இடங்களில் தூக்கியெறிந்த சம்பவம் நாட்டை உலுக்கியிருக்கிறது.
கொலை தொடர்பாக காதலன் அஃப்தாப் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்த சமயத்தில், சிறுசிறு சண்டைகள் வரும்போது ஷ்ரத்தா கடுமையாகத் தாக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
ஷ்ரத்தாவின் நண்பரான ராகுல் ராய், ”2020ஆம் ஆண்டு அஃப்தாப் அமீனால், ஷ்ரத்தா தாக்கப்பட்டிருந்த சமயத்தில், அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்றேன். அப்போது அவர், இரண்டு மூன்று முறை தாக்கப்பட்டிருந்தார்.
கழுத்தை நெரிக்க முயன்றதுபோல் ஆழமான தடம் இருந்தது. இதற்காக மகாராஷ்டிர மாநிலம் வசாய் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதுகுத்தண்டு வலி, தோள்பட்டை வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முகத்தில் சில காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஷ்ரத்தாவை அனுமதிக்கும்போது அஃப்தாப்பும் உடன் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேசிய மருத்துவர் எஸ்.பி.ஷிண்டே, ”தோள் பட்டை மற்றும் முதுகுவலி காரணமாக ஷ்ரத்தா அனுமதிக்கப்பட்டார். கடுமையான காயங்கள் அவர் உடலில் இருந்தன.
அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அஃப்தாபும் உடன் இருந்தார்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஷ்ரத்தாவுக்கு அந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சொல்லவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது காயங்கள் ஏற்பட்ட தழும்புகளுடன், ஷ்ரத்தா சிரித்த முகமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்
விஜய்யின் வாரிசுக்காக களமிறங்கிய சீமான்
100 யூனிட் மானிய மின்சாரம் ரத்தா: செந்தில்பாலாஜி பதில்!