புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Delhi Railway station stampede
உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜுல் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (பிப்ரவரி 15) இரவு 10 மணிக்கு இயக்கப்பட வேண்டிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து பிரயக்ராஜுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானதும் ஏற்கனவே ரயிலுக்காக பிளாட்பார்ம்களில் காத்திருந்த பக்தர்கள் சிறப்பு ரயிலை பிடிக்க முண்டியடித்தனர்.

இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி ரயில் நிலையத்தில் சிலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் செய்தி அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். Delhi Railway station stampede