டெல்லி: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 7 குழந்தைகள் பரிதாப பலி!

Published On:

| By indhu

Delhi: Private hospital fire accident - 7 children killed!

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று (மே 25) இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7  குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியுள்ளது.

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து காவல்துறை தரப்பில், “நேற்று இரவு 11.30 மணியளவில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது அருகிலிருந்த கட்டடங்களிலும் தீ பரவி இருந்தது. ஆனால், அதில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இன்று (மே 26) காலை தீ அணைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அடுல் கார்க் இதுக்குறித்து பேசியபோது, “முதலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. மேலும், தீ பரவியதால் மருத்துவமனைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறி தீ வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.” என்றார்.

டெல்லி காவல் ஆணையர் ஷாதரா கூறுகையில், “தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மருத்துவமனையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்த நிலையில், டெல்லியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலக பட்டினி தினம்: விஜய்யின் உத்தரவு – என்னன்னு தெரிஞ்சுகோங்க!

IPL Final: மழை வந்தால் என்ன ஆகும்?