மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

இந்தியா விளையாட்டு

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்களின் போராட்டத்தினை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று டெல்லி காவல்துறை இன்று (மே 29) அறிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக இருப்பவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்யக்கோரி கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தற்காலிக கூடாரம் எழுப்பி போராடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் முன்னெடுத்தனர்.  

அதனை தடுத்து நிறுத்திய போலீசார், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்திய சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அத்துமீறி செல்ல முயன்றதை அடுத்து இனி ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை என்று டெல்லி காவல்துறையின் அறிவிப்பு மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து புதுடெல்லி காவல்துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜந்தர் மந்தரின் அறிவிக்கப்பட்ட இடத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் சுமூகமாக நடந்து கொண்டிருந்தது.

ஆனால் நேற்று போராட்டக்காரர்கள் அனைத்து சட்ட விதிகளையும் மீறி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் இனி ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை.

அதே நேரத்தில் மல்யுத்த வீரர்கள் எதிர்காலத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு ஏதேனும் பொருத்தமான, அறிவிக்கப்பட்ட இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜந்தர் மந்தரில் கட்டப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜந்தர் மந்தரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு முதல் ஏழு அடுக்கு வரை தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா

”150 வயசு வரைக்கும் இருப்பேன்: ட்ரோல் ஆகும் நாட்டாமை!

தாக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்.. நீக்கப்பட்ட திமுக நிர்வாகி: தொடரும் போராட்டம்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *