பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா டெல்லி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், இன்று (அக்டோபர் 31) ‘தி வயர்’ அலுவலகம் மற்றும் அதன் ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
தன் பெயருக்கு களங்கம் விளைவித்த ‘தி வயர்’ இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரில், “ ‘தி வயர்’ நிறுவனம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் போலி ஆவணங்களை தயாரித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆகையால் அந்நிறுவன ஆசிரியர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அந்த நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பாக, ’பாஜக நிர்வாகி புகார்: இணையதளம் மீது வழக்குப்பதிவு’ என்ற பெயரில் நேற்று (அக்டோபர் 30) நம்முடைய மின்னம்பலத்தில் விரிவாக கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், ’தி வயர்’ இணையதள அலுவலகம் மற்றும் அதன் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, ஜாஹ்னவி சென் ஆகியோரின் வீடுகளிலும் டெல்லி காவல்துறை இன்று (அக்டோபர் 31) சோதனை நடத்தியது. 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், எம்.கே.வேணுவின் ஐபோன் மற்றும் ஐபேடை டெல்லி போலீசார் கைப்பற்றிச் சென்றுள்ளனர். மேலும் ஒருவருடைய ஐபோன், ஐமேக்கைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து எம்.கே.வேணு scroll.in என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையினர் மாலை 4.40 மணிக்கு என் வீட்டுக்கு வந்து மாலை 6 மணிவரை சோதனையிட்டனர்.
அமித் மாளவியா புகார் செய்ததன் காரணமாக, டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு போலீசார் இங்குவந்து சோதனையிட்டனர். அப்போது எனது ஐபோன் மற்றும் ஐபேடை எடுத்துச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
’தி வயர்’ இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அளித்த பேட்டியில், ”நாங்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம்.
அவர்கள் கேட்ட சாதனங்கள் மற்றும் கடவுச்சொற்களை வழங்கியுள்ளோம். அதில் நான்கு சாதனங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
இந்தியாவில் 150 மில்லியன் பேருக்கு மனநல பாதிப்பு!
குஜராத் பாலம் விபத்து: 9 பேர் கைது!