டெல்லியில் ‘நியூஸ் க்ளிக்’ செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (அக்டோபர் 3) சோதனை நடத்தினர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திடமிருந்து அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றதாக ‘நியூஸ் க்ளிக்’ நிறுவனம் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையும் ‘நியூஸ் க்ளிக்’ தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்த வழக்கில் நியூஸ்க்ளிக் இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், நியூஸ்க்ளிக்கின் தலைமைச் செய்தி ஆசிரியர் அதிகாரி ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தச்சூழலில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்நிறுவனம் தொடர்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அமெரிக்க மில்லியனர் நெவில் ராய் சிங்கத்தை மையமாகக் கொண்ட நெட்வொர்க்கிலிருந்து “சீனப் பிரச்சாரத்தை” உலகம் முழுவதும் பரப்புவதற்காக ‘நியூஸ் க்ளிக்’ நிதி பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நெவில் ராய் சீன அரசாங்க ஊடக இயந்திரத்துடன் நெருக்கமாக பணியாற்றியது என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்தசூழலில் நியூஸ்க்ளிக் நிறுவனம் மீது டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர் எண் : 224/2023) செய்தது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம் 153(a) (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும் 120 (b) (குற்றச் சதியில் பங்கு) ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ‘நியூஸ் க்ளிக்கின் செய்தியாளர்கள், நியூஸ்க்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தா, வீடியோ பத்திரிக்கையாளர் அபிசார் ஷர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங், ஊர்மிளேஷ், எழுத்தாளர் கீதா ஹரிஹரன், பிரபல பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரம் குறித்த செய்திகளை வழங்கும் அவுனிந்த்யோ சக்ரவர்த்தி, வரலாற்று செய்திகளை தரும் சோஹைல் ஹாஷ்மி, சஞ்சய் ரஜவுரா ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை போலீசார் சோதனையை தொடங்கினர். அதன்படி இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், பிரபீர் புர்கயாஸ்தா, ஊர்மிளேஷ், அவுனிந்த்யோ சக்ரவர்த்தி ஆகியோர் விசாரணைக்காக சிறப்புப் பிரிவு தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் சிறப்புப் பிரிவு தலைமையகத்திற்குள் தங்களை அனுமதிக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த விசாரணையின் போது வெளிநாட்டுப் பயணங்கள், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 25 கேள்விகளின் பட்டியலை போலீசார் முன்வைத்ததாக பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்து 6 மணிக்கு லோதி நகர் சிறப்புப் பிரிவு தலைமையகத்தில் இருந்து வெளியே வந்த பத்திரிகையாளர் குஹா தாகுர்தா, “போலீசார் வினோதமான கேள்விகளை கேட்டனர். அமெரிக்காவில் உள்ள தனது மைத்துனருக்கு தொடர்பு கொண்டது பற்றியெல்லாம் கேட்டனர். எனது சக ஊழியர்கள் பலர் சிறப்பு அறைக்கு அழைத்து வரப்பட்டனர்” என்றார்.
முன்னதாக பத்திரிகையாளர்களின் மொபைல் போன்கள், மடிக்கணினிகளையும் போலீசார் பறிமுதல் செய்து சென்றனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் அபிசார் ஷர்மா தனது ட்விட்டர் பதிவில், “போலீசார் எனது வீட்டிற்கு வந்து எனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை எடுத்துச் செல்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஷா சிங், “இந்த போனில் இருந்து எனது கடைசி ட்வீட் இது தான். டெல்லி போலீசார் எனது போனை பறிமுதல் செய்துள்ளனர்,” என பதிவிட்டுள்ளார்.
இந்த சோதனையின் இறுதியில் ‘நியூஸ்க்ளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை.
டெல்லியில் உள்ள சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். சிபிஎம் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் சீதாராம யெச்சூரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியிருக்கின்றனர். அவரது வீட்டில் இருந்தும் லேப்டாப் மற்றும் போனை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இந்த சோதனை குறித்து யெச்சூரி கூறுகையில், “போலீசார் எதை விசாரிக்க முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. இது ஊடகங்களை முடக்கும் முயற்சி” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதற்கு இந்தியா கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, “பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த சோதனை குறித்து தெளிவான விவரங்களை அளிக்குமாறு அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொரோனாவின் எதிரிகள்: யார் இந்த காட்டலின், வெய்ஸ்மேன்?
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!