காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் என இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த வீராங்கனைகள், தங்களுக்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கடந்த ஜனவரி மாதம் 3 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் வீராங்கனைகளின் குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்தது.
இந்த குழுவும் விசாரணை செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனாலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இரண்டாம் கட்ட போராட்டம்
இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இரண்டாம் கட்ட போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி நடத்தி வருகின்றனர். சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், “பாலியல் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பதவியை பறிக்க வேண்டும். அவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குக்கூட பதியப்படாத நிலையில் உச்ச நீதிமன்றத்தை மல்யுத்த வீராங்கனைகள் நாடினர். வீராங்கனைகளின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்கள் மனு தொடர்பாக டெல்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, டெல்லி போலீஸ் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அப்போது, “நீதிக்கான தேடலில் தங்களின் முதல் வெற்றி” என்று மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிட்டனர்.
கன்னோட் பிளேஸ் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒன்று மைனர் பெண் ஒருவர் அளித்த புகார் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் முதல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதுபோன்று மற்ற வீராங்கனைகள் அளித்த புகாரில் விசாரணை நடத்த இரண்டாவது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை கூறுகிறது. எப்.ஐ.ஆர் பதிவான போதிலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டை மறுக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங்
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங், தான் நிரபராதி என்றும், நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகளை நம்புவதால் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்றும் தெரிவித்தார்.
வீரங்கனைகளின் போராட்டம் என்பது தனது பெயரை கெடுப்பதற்கான சதி. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது எனக்கு பெரிய விஷயமல்ல, ஆனால் குற்றவாளியாக பதவி விலக மாட்டேன் என்றும் கூறினார்.

இந்தியா முழுவதிலிருந்தும் ஆதரவு
வீராங்கனைகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.பி. அப்துல்லாவை அனுப்பி வைத்து ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இவர்கள் மட்டுமின்றி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மூத்த வீரர் சேவாக் உள்ளிட்ட முன்னாள், இன்னாள் விளையாட்டு வீரர்களும் பாஜக எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மல்யுத்த நட்சத்திரங்கள் தெருக்களில் அமா்ந்து நடத்தி வரும் போராட்டம் ஒழுங்கீனமானது என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் பி.டி.உஷா கூறியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று (மே 3) வீராங்கனைகளை போராட்ட களத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
நாடு முழுவதும் இவ்வாறு வீராங்கனைகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்னும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, நேரில் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு
இந்தசூழலில் தான் நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீசார் தங்களது மார்பை பிடித்து தள்ளினர் என வீராங்கனைகள் குற்றம்சாட்டுகின்றனர்.
டெல்லியில் நேற்று மழை பெய்துள்ளது. இதனால் போராட்ட களத்தில் படுப்பதற்காக மடிக்கும் வகையிலான கட்டில், போர்வை, இருக்கைகளை கொண்டு வர போராட்டக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷியின் கணவர் சத்யவர்த் காடியன் உள்ளிட்ட ஆண் மல்யுத்த வீரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பஜ்ரங் புனியாவிற்கு தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. வினேஷ் போகத்திற்கு காலில் காயம் ஏற்பட்டது. துஷ்யந்த் போகத்திற்கு நெற்றியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
டெல்லியில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டனர்.
இரவு நடந்த சம்பவம் குறித்து வீராங்கனை வினேஷ் போகத் கூறுகையில், “இந்த பகுதியில் மழை பெய்ததால் தண்ணீர் நிரம்பியது. தூங்குவதற்கு இடமில்லை, எனவே நாங்கள் கட்டில்களை கொண்டு வர நினைத்தோம்.
அதற்கு அனுமதி மறுத்துதான் போலீசார் தாக்கினர். குடிபோதையில் ஒரு போலீஸ்காரர் எனது சகோதரனைத் தாக்கினார். சம்பவ இடத்தில் ஒரு பெண் போலீஸ் கூட இல்லை. இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது நாட்டுக்காக எந்த வீரரும் பதக்கம் வெல்வதை நான் விரும்பவில்லை.
எங்களது மரியாதைக்காக போராடுகிறோம். ஆனால் போலீசார் எங்களைத் தள்ளிவிட்டு துஷ்பிரயோகம் செய்தார்கள். எங்கள் மார்பை பிடித்து கீழே தள்ளிவிட்டார். நாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டோம்.
இப்படி ஒரு நாளை பார்க்கவா நாட்டுக்காக பதக்கங்களை வென்றோம். தவறு செய்த பிரிஜ் பூஷன் வீட்டில் படுக்கையறையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், அதைச் செய்யுங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களை இப்படி அவமதிக்காதீர்கள்” என்று அழுதுகொண்டே கூறினார்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் தரப்பில் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி தலைவர் சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிப்பு கட்டிலை கொண்டு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போது மல்யுத்த வீராங்கனைகளின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.” என்று கூறுகின்றனர்.
இதனை மறுக்கும் மல்யுத்த வீரர்கள், என்ன நடந்தது என்று சிசிடிவி கேமராக்களை பார்த்தால் தெரியும் என்று கூறிகின்றனர்.
அதுபோன்று, “இந்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளால் எந்த பயனும் இல்லை. இந்த விருதுகளை எல்லாம் அரசிடமே திரும்ப தர இருக்கிறோம். போலீசார் எங்களிடம் தவறாக நடக்கும்போது இந்த வீரர்கள் எல்லாம் பத்மஸ்ரீ வாங்கியவர்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லையா. இது எனக்கு மட்டும் இல்லை. சாக்ஷியும் அங்கே இருந்தார்” என்று பஜ்ரங் புனியா கூறினார்.
இந்த போராட்டம் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு கைக்கூப்பியவாறு பதிலளித்த வினேஷ் போகத், “எங்களின் வாழ்க்கையை பணயம் வைத்து போராடுகிறோம். எங்களிடம் பிரதமரை வந்து பேச சொல்லுங்கள், உள்துறை அமைச்சரை வந்து பேச சொல்லுங்கள். எங்களுக்கு நீதி வழங்கச் சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்.
நேற்று நள்ளிரவு நடந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் அதிகளவிலான பேரிகாடுகளை வைத்து தடுத்துள்ளனர். அதுபோன்று வீராங்கனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், டெல்லி போலீஸுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடும் கண்டனத்தை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தொடரும் போராட்டம்
இந்த பரபரப்புக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தில் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கு இன்று (மே 4) தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றத்துக்கு வந்தீர்கள்.
இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதால் இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டுமென்றால் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ, அல்லது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையோ நாடலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்பதாக தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்கள் உலகளவில் உயர்ந்து நிற்க வேண்டும் என்று கூறும் பிரதமர் மோடி, இன்று தலைநகரில் நீதிக்கேட்டு 10 நாட்களுக்கும் மேலாக சாலையில் போராடி வரும் வீராங்கனைகளின் பக்கம் நிற்க மறுப்பது ஏன்?
பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் கண்ணீர் குரலுக்கு பிரதமர், செவிமடுத்து அவர்கள் கோரும் நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதே தற்போது விளையாட்டு வீரர்களை தாண்டி ஒவ்வொரு இந்தியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடக்குமா…? பொறுத்திருந்து பார்ப்போம்…
பிரியா