டெல்லியில் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.
டெல்லியில் தன்னுடைய காதலியான ஷ்ரத்தாவை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன் அஃப்தாபை போலீஸார் நேற்று (நவம்பர் 14 ) கைது செய்தனர். கடந்த மே மாதம் அந்த இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில் , பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி கூடுதல் காவல் துணை ஆணையர் அங்கித் சௌஹான் கூறுகையில், ”மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா , ஷ்ரத்தா வாக்கா் இருவரும் கால் சென்டரில் பணியாற்றியபோது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் ஒருவரை ஒருவா் விரும்பத் தொடங்கியுள்ளனா். ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவா்களின் விருப்பத்தை ஷ்ரத்தாவின் பெற்றோா் ஏற்கவில்லை.
இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய ஷ்ரத்தா, டெல்லியில் உள்ள மெரெளலி பகுதியில் குடியேறி அஃப்தாபுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தாா். அதன்பின்னா் அவருக்கும், அவரின் பெற்றோருக்கும் இடையே சரிவர பேச்சுவாா்த்தை இல்லை” என்று கூறினார்.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஃப்தாப் இடம் ஷ்ரத்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இதுதொடா்பாக கடந்த மே மாதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடுமையாக கோபமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன்பின்னா், அவா் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளாா்.
இந்நிலையில், டெல்லி காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அஃப்தாபை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஃப்தாப் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தானும் ஷிரத்தாவும் டெல்லியில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அப்போது ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும்
இதனால் ஆத்திரமடைந்து ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும் தலையணை கொண்டு நீண்ட நேரம் அழுத்தி கொன்றதாகவும் இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க உடலை 35 துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.
அடுத்தக்கட்ட அதிர்ச்சியாக ஷ்ரத்தாவின் நண்பர்கள் பரபரப்பு தகவலை அளித்துள்ளனர். அதில், ஷ்ரத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களை தொடர்பு கொண்டு என்னை கூட்டி செல்லுங்கள் இல்லையென்றால் அவன் என்னை கொன்று விடுவான் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.
ஷ்ரத்தா கூறியதை கேட்டு அச்சமடைந்த அவர்கள், ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப்பை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சத்தம் போட்டுள்ளனர். அவளை சித்ரவதை செய்தால் போலீசில் புகார் அளித்து விடுவோம் எனவும் மிரட்டி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஷ்ரத்தாவோடு தொடர்பில் இல்லாமல் போயுள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அஃப்தாபுவை கண்டித்து காட்கோபரில் பா.ஜனதா எம்எல்ஏ ராம் கதம், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி கூறிய ராம் கதம் , ” அஃப்தாப் அமீன், ஷ்ரத்தாவை கொலை விவகாரத்தில், பின்னணியில் ‘லவ் ஜிகாத்’ உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த சம்பவத்துக்கு பின்னால் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தனிநபர் செய்த கொலை போல இது தொியவில்லை. இதற்கும் முன்பும் இதுபோல சம்பவங்கள் நடந்து உள்ளன” என்றார் ராம் கதம்.
லிவிங் டு கெதர் உறவில் வந்த விரிசலால் ஏற்பட்ட கொலை என்று விசாரணை போய்க் கொண்டிருக்கும் நிலையில், லவ் ஜிகாத் என்று பாஜகவினர் கூறியிருப்பதால் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபிஎல்: தொடங்கியது ஏலப் பேச்சு… எந்தெந்த அணியிடம் எவ்வளவு கோடி இருப்பு?
எடப்பாடிக்கு புதிய சிக்கல்: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடா?