ஃப்ளிப்கார்ட்க்கு 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா

தரமில்லாத குக்கர்களை விற்றதற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது செல்லும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய உலகில் பலரும் ஆன்லைன் மூலமாக தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வருகின்றனர். இந்த ஆன்லைன் வியாபார சேவையை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இதில், ஃப்ளிப்கார்ட் என்ற நிறுவனமும் பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், 598 தரமற்ற பிரஷர் குக்கர்களை நுகர்வோர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

இந்த பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததன் வாயிலாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 1,84,263 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

தரமற்ற பிரஷர் குக்கர்களை வியாபாரம் செய்தது குறித்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த அவ்வாணையம், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி, வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறும் வகையிலும்,

நிர்ணயிக்கப்பட்டுள்ள தரச் சான்று விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அந்த தரமற்ற விற்பனை செய்யப்பட்ட பிரஷர் குக்கர்களை திரும்பப் பெறவும், அதற்கு நுகர்வோர் தரப்பில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பத் தரவும் ஆணையம் உத்தரவிட்டது.

இதேபோல இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்த சுமார் 2,265 தரமற்ற உள்நாட்டு பிரஷர் குக்கர்களை திரும்பப் பெறவும், அதற்கான தொகையை நுகர்வோரிடம் ஒப்படைக்கவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 23) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்ததுடன், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்தபடி உரிய நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், “பிஐஎஸ் முத்திரை இல்லாமல் பிரஷர் குக்கர்களை விற்றதற்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும். பழுதடைந்த குக்கர்களை வாங்கிய நுகர்வோருக்கு உரிய பதிலையும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவிக்க வேண்டும்” என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெ.பிரகாஷ்

வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *