வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 7 ) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், தூக்கிலிடப்படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திரப்பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் தகவல்களை வெளியிட்டார். இதனால் வட இந்தியாவில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இத்தகவல்கள் போலியானவை என்றும் தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். பிகார் அரசு அனுப்பிய அதிகாரிகள் குழுவும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 7 ) விசாரணை நடைபெற்றது. அப்போது வதந்தி பரப்புவது தேச துரோகம் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.
வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் குறைந்த பட்சம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவருக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்