20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொன்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வடமேற்கு தில்லியில் உள்ள கஞ்சவாலா என்ற இடத்தில் ஒரு சாலையில் கார் ஒன்றில் சடலம் இழுத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாருதி பலேனோ வகையைச் சேர்ந்த கார் யு-டர்ன் போடுவதும் அதற்கு கீழ் சடலம் இருப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
விசாரணையில் அது அஞ்சலி சிங் என்ற 20 வயதான இளம்பெண் என்றும் புத்தாண்டு அன்று பணி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது வேகமாக வந்த கார், அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை இடித்திருக்கிறது.

அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் மாட்டிய பெண்ணை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை நேரில் கண்ட சாட்சியான அங்கு இனிப்பு கடை நடத்தி வரும் தீபக் தஹியா என்பவரும் போலீசில் தெரிவித்துள்ளார்.
“அப்போது மணி 3:20… கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது சுமார் 100 மீட்டர் தூரத்தில் வாகனத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. டயர் வெடித்துவிட்டதாக நினைத்தேன்.கார் நகர்ந்தபோதுதான் ஒரு பெண்ணின் உடலை பார்த்தேன்.
அவரது உடல் காரில் இழுத்துச் செல்லப்பட்டது. நான் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தேன்”. காரில் இருந்தவர்கள் மீண்டும் மீண்டும் அதே சாலையில், பல முறை யு-டர்ன்களை எடுத்துச் சென்றனர்.
“நான் அவர்களை பலமுறை தடுக்க முயன்றேன், ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரம், அவர்கள் அந்தப் பெண்ணின் உடலை சுமார் 20 கிமீ தூரம் இழுத்துச் சென்றனர்.
போலீசில் சொல்லிவிட்டு எனது மோட்டார் சைக்கிளுடன் காரைத் துரத்திச் சென்றேன். காரில் இருந்து சடலம் கீழே விழுந்ததை அடுத்து, குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர். இது ஒரு விபத்தாக இருக்க முடியாது என்று தஹியா தெரிவித்துள்ளார்.
காரில் 5 பேர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர்கள் அதிக சத்தம் பாட்டு வைத்திருந்தாகவும் போலீசிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மனோஜ் மிட்டல் சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அவர் கற்பழிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் போலீசார் குற்றவாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை மூடி மறைக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜகவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் மீது இலகுவான ஐபிசி பிரிவுகளின் கீழ் (304 ஏ – அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மியும் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவம் வெட்கக்கேடானது. குற்றவாளிகள் ஈவு, இரக்கமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
கைது செய்யப்பட்டுள்ள 5 குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியல் பின்புலம் கொண்டவராக இருந்தாலும் விடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ட்விட்டரில், “குற்றவாளிகளின் கொடூரமான உணர்ச்சியற்ற தன்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்” என்றும் வழக்கை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆதரவும், உதவியும் நிச்சயம் தரப்படும். ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவேண்டாம். பொறுப்பான சமுதாயத்தை நோக்கி ஒன்றாக வேலை செய்வோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கலை.ரா
மீண்டும் வந்த தேர்தல் ஆணையத்தின் கடிதம்: அதிருப்தியில் எடப்பாடி
டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!