குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்
பெற்ற தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ பகிரங்கமாக பேசியதை அடுத்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மாலிவால் அதே போன்ற தனது அனுபவத்தை தற்போது பகிர்ந்திருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பூ, தான் சிறு வயதில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் WeTheWomen நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதில், “பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண் குழந்தைகள் வெளிப்படையாக பேச வேண்டும். சிறு வயதில் நானும் இதுபோன்ற கொடுமையை எனது தந்தையிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறேன்.
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை இப்படிதான் நடக்கிறது. பின்விளைவுகளுக்கு பயந்து குழந்தைகள் இதனை வெளியில் சொல்வதில்லை.
எனவே இப்படி அமைதியாக இருக்கும் குழந்தைகளை கயவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்துகிறார்கள்” என்று கூறினார்.
இந்நிலையில் , டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் சிறு வயதில் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இது குறித்து ஸ்வாதி மாலிவால் கூறுகையில் “நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
அவர் என்னை அடிக்கடி அடிப்பார். அவர் வீட்டிற்கு வரும் போது எல்லாம் நான் பயந்து, படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வேன்.
ஒவ்வொரு இரவும் பெண்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற எப்படி உதவ வேண்டும், குழந்தைகளைச் சுரண்டும் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையே யோசித்து கொண்டிருப்பேன்.
போனிடெயிலை பிடித்து சுவரில் எனது தலையை மோதுவார். எனக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வரும். ஒரு நபர் பல கொடுமைகளுக்கு ஆளாகும்போது தான் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். அது முழு அமைப்பையும் அசைக்கக்கூடிய நெருப்பை எழுப்புகிறது.
பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் இருந்ததால் இந்த சம்பவம் பல முறை நடந்தது.
மறக்காமல், மன்னிக்காமல், அதை என் பின்னால் வைத்துவிட்டு முன்னேறிச் செல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது. சிறுவயதில் என் தந்தையால் நான் சந்தித்த துன்புறுத்தல் கடினமான விஷயம். ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளானால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!