”டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்” என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அளவு (ஏக்யூஐ) 450க்கும் அதிகமான அளவில் தொடர்கிறது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு காற்று தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
இதற்கு 51 சதவிகித போக்குவரத்து வாகனங்கள் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது.
அதன் ஒருகட்டமாக காற்று மாசு மோசமான நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டடப் பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் பாதிக்கப்படும் கட்டடப் பணியாளர்களில் 10 லட்சம் பேருக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை அளிப்பதாக முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது தவிர, 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 5) முதல் விடுமுறை விடப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதே போல் 5ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கு வெளியே சென்று படித்தல் மற்றும் விளையாடுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அது அறிவித்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் காற்று மாசினை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு வரும் 10 ஆம் தேதி அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் பெரியண்ணன் தனம்- காங்கிரஸ் எம்.பி.க்கள் குமுறல்!