டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்ளூர் மக்களை தவிர்த்து அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
சர்வர் செயல் இழப்பு
இந்தச் சூழலில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம், தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வருகிறது. இது, கடந்த நவம்பா் 23ஆம் தேதி செயல் இழந்தது.
இதனால் வெளிநோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பிரிவு என கணினி தொடர்பான பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் மருத்துவ அலுவலர்கள் மூலம் நேரடியாக செய்யப்பட்டது.
மேலும், சர்வர் பழுதடைந்ததால், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், டிஜிட்டல் மருத்துவச் சேவைகள், ஸ்மார்ட் லேப், பில்லிங், நோயாளிகள் குறித்த அறிக்கை தயாரித்தல், முன்அனுமதிச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் என்ஐசி ஆகியவை இணைந்து செயல்பட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டன.
இது குறித்து உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியதில், இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
ஹேக்கர்கள் நிபந்தனை
எய்ம்ஸ் மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டிருந்த முக்கியமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான நோயாளிகளைப் பற்றிய விவரங்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும்,
அத்தரவுகளை திரும்ப வழங்க வேண்டுமென்றால் ரூ.200 கோடி தர வேண்டும் என்று ஹேக்கர்கள் நிபந்தனை விதித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை டெல்லி காவல் துறை மறுத்திருந்தது.
இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையின் 100 சர்வர்களையும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ’தீவிரமான ஆய்வுகள், முயற்சிகளுக்குப்பின் 100 சர்வர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. இந்த சர்வர்களில் ஹேக்கர்கள் புகுந்து, முடக்கினர்.
சைபர் தாக்குதல் நோக்கம்
இந்த சேதம் கடுமையாக இருந்தது என்றாலும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. 5 சர்வர்களில் உள்ள புள்ளிவிவரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சைபர் தாக்குதல், சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களில் ஊடுருவியுள்ளனர்”எனத் தெரிவித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சாதாரண நோயாளிகள் முதல் விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என பலரும் சிகிச்சை பெறுகிறார்கள்.
நோயாளிகளின் விவரங்களைத் திருடி பணம் சம்பாதிப்பதற்காகவே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இம்மருத்துவமனையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 38 லட்சம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்!
ஈஷாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்: ரத்து செய்த உயர்நீதிமன்றம்