டெல்லி விபத்தில் 13 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட அஞ்சலி மரணத்தில் புதிய திருப்பமாக அவர் தனது தோழி நிதி என்பவருடன் ஸ்கூட்டியில் பயணித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி டெல்லியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் நடந்த விபத்தில் ஸ்கூட்டி மீது மாருதி பலேனோ கார் மோதிய விபத்தில் அஞ்சலி என்ற இளம்பெண் காரின் அடியில் சிக்கி 13 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டுள்ளார்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விபத்தை ஏற்படுத்திய தீபக் கன்னா, உள்ளூர் பா.ஜ.க தலைவர் மனோஜ் மிட்டல், கிரிஷன், மிதுன், அமித் ஆகிய ஐந்து பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் அதிரடி திருப்பமாக அஞ்சலியுடன் அவரது தோழி ஸ்கூட்டியில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில்,புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு அஞ்சலி மற்றும் அவரது தோழி இருவரும் அதிகாலை 1.45 மணியளவில் ஓட்டலில் இருந்து வெளியே வருகின்ற காட்சிகள் உள்ளது.
விபத்து நடப்பதற்கு முன்பு நிதி ஸ்கூட்டரை இயக்குகிறார். அஞ்சலி பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். சில தூரங்கள் பயணம் செய்த பிறகு இருவரும் இருக்கையை மாற்றிக் கொள்கின்றனர். அஞ்சலி ஸ்கூட்டியை ஓட்டுகிறார்.
அஞ்சலி ஓட்டிய ஸ்கூட்டி விபத்துக்குள்ளானதும் காரின் அடிப்பகுதியில் அவர் சிக்கி கொள்கிறார்.நிதி சிறு காயங்களுடன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அஞ்சலியின் தோழி இந்த விபத்தில் முக்கிய சாட்சியாக தற்போது மாறியுள்ளார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து நிதி தப்பிச் சென்றுள்ளார்.இந்த வழக்கில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.
செல்வம்
நடுவில் மாட்டிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!
பொங்கல் தொகை எப்போது?- அமைச்சர் முக்கியத் தகவல்!