மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி தொடங்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (ஜூலை 29) காலை புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூர் புறப்படுவதற்கு முன்னதாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் எம்,பி.க்கள் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ”மணிப்பூர் பிரச்னையில் யாரும் அரசியல் செய்யவில்லை. இதுநாள் வரை பிரதமர் கலவரம் நடந்துள்ள மணிப்பூருக்குச் செல்ல முயற்சிக்கவில்லை. மத்திய பாஜக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த விசிட்டுக்கு பிறகு மத்திய அரசு விழித்துக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி கூறுகையில், “நாங்கள் மணிப்பூர் மக்களைச் சந்தித்து அவர்களுக்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி போராடுகிறது என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவே செல்கிறோம். மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இந்த பயணத்திற்கு பிறகான நாடாளுமன்ற விவாதத்தில் மணிப்பூர் குறித்து பிரதமர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் கூறுகையில், “மணிப்பூரில் இரு சமூகத்தினரையும் சந்திக்க முயற்சிப்போம். அவர்களுக்காக நாங்கள் செல்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மாநில அரசின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
அம்மாநில தலைநகர் இம்பாலுக்கு மதியம் செல்லும் அவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் சென்று இரண்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசுகின்றனர். நாளை காலை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு சந்திக்க உள்ளது.
அதன்பின்னர் டெல்லி திரும்பும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு வரும் திங்கள்கிழமை கூடும் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது!