சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

Published On:

| By Kalai

Declared as international terrorist

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவனான அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான்.

மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினரான அப்துல் ரகுமான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராவான்.

ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் மக்கி மீது இந்தியா குற்றம்சாட்டியது.

அப்துல் ரகுமானை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன.

ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக அப்துல் உள்பட பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை தடுத்து நிறுத்தியது.

இந்தநிலையில் ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐ.நா ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய அப்துல் ரகுமான் மக்கிக்கு, இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல், ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல், ஸ்ரீநகர் தாக்குதல் உள்ளிட்டவற்றிலும் தொடர்பு உண்டு.

2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.

அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel